ஸ்ரீநகர்: எல்லையில் குவிக்கப்பட்டுள்ள ராணுவத் துருப்புகளை திரும்பப் பெற்று வருவதாக சீனா கூறியது பொய்யான தகவல் எனத் தெரிய வந்துள்ளது.
அண்மையில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்களின் மூலம் எல்லையில் உள்ள லடாக் பகுதியில் சீனாவின் புதிய ராணுவ முகாம்கள் தொடர்ந்து செயல்பட்டு வருவது உறுதியாகி உள்ளது.
எல்லைப் பிரச்சினை தொடர்பாக இந்தியா, சீனா இடையே 16 சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. அப்போது பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
அதன்படி எல்லையில் உள்ள 'காக்ரா - ஹாட் ஸ்பிரிங்' பகுதியில் இருந்து இருநாட்டு வீரர்களும் திரும்பப் பெறப்பட்டனர். கடந்த 12ஆம் தேதியுடன் படைகளைத் திரும்பப் பெறும் நடவடிக்கை முடிவுக்கு வந்ததாக இரு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அக்குறிப்பிட்ட எல்லைப் பகுதியில் இரு தரப்புப் படைகளும் இல்லை என்பதை இந்தியாவும் சீனாவும் மீண்டும் ஒருமுறை உறுதி செய்து கொண்டதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில், அண்மைய செயற்கைக்கோள் படங்களின் மூலம், காக்ரா எல்லைப் பகுதியில் சீன ராணுவம் தனது புதிய முகாம்களை அமைத்திருப்பது தெரியவந்துள்ளது. படைகளைத் திரும்பப் பெற்றதாகக் கூறப்பட்ட பகுதியில் இருந்து சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் இந்தப் புதிய முகாம்கள் உள்ளன.
இதன் மூலம் சீன ராணுவம் நம்பிக்கைத் துரோகம் செய்துள்ளதாக இந்தியத் தரப்பு கருதுகிறது.
இதுகுறித்து லடாக் பகுதியைச் சேர்ந்த கவுன்சிலர் கோன்சோக் சிடான்சின் செய்தியாளர்களிடம் பேசுகையில், இருதரப்பும் ஒப்புக்கொண்டதன் அடிப்படையில் இந்திய ராணுவம் முறையாகச் செயல்படுகிறது என்றும் காக்ரா பகுதியில் இந்திய ராணுவம் மேற்கொள்ளும் வழக்கமான சுற்றுக்காவல் பணிக்கு சீன ராணுவத்தினர் தொடர்ந்து இடையூறு விளைவித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
"கடந்த ஐம்பது ஆண்டுகளாக அக்குறிப்பிட்ட பகுதிகளில் உள்ளூர் மக்கள் கால்நடைகளை மேய்த்து வந்தனர். அண்மைய படைக்குவிப்பு காரணமாக இனி அங்கு பொதுமக்கள் செல்ல இயலாது. இதுவரை நான்கு எல்லைப் பகுதிகளில் இருந்து சீனா தனது படைகளை திரும்பப் பெற்றதாகக் கூறுகிறது," என்றார் கவுன்சிலர் கோன்சோக் சிடான்சின்.

