புதுடெல்லி: காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியை மீண்டும் ராகுல் காந்தி ஏற்க வேண்டும் என அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் பல்வேறு மாநில காங்கிரஸ் கமிட்டிகளும் அவருக்கு ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளன.
நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி கண்டது. இதையடுத்து கட்சியின் நிர்வாக அமைப்பை மாற்றியமைக்க வேண்டும் எனும் கோரிக்கை எழுந்தது.
கட்சிக்கு முழு நேரத் தலைவர் இல்லாததால் தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியவில்லை என நிர்வாகிகள் பலரும் வெளிப்படையாகக் கருத்து தெரிவித்தனர்.
அனைத்துக்கும் மேலாக நேரு குடும்பத்துடன் தொடர்பில்லாத ஒருவர்தான் கட்சித் தலைவராகப் பொறுப்பேற்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்தது. இந்நிலையில், குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பலர் அடுத்தடுத்து அக்கட்சியில் இருந்து விலகி வருகின்றனர்.
இதனால் உட்கட்சி மோதல் வலுத்து வருகிறது. இந்நிலையில் கட்சித் தலைவர் பதவியை ஏற்க வேண்டும் என பல நிர்வாகிகள் ராகுல் காந்தியிடம் வலியுறுத்தி வருகின்றனர். அவரோ தலைவர் பதவியில் தமக்கு விருப்பம் இல்லை எனக் கூறிவருகிறார்.
இந்நிலையில், மாநில காங்கிரஸ் கமிட்டிகள் ராகுலுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. மாநில அளவிலான கூட்டங்களில் ராகுலுக்கு ஆதரவாக தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன.
ராஜஸ்தான், குஜராத், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, கட்சித் தலைமையிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிக விரைவில் தமிழகம் உட்பட இதர மாநில காங்கிரஸ் கமிட்டிகளும் இவ்வாறு தீர்மானம் நிறைவேற்ற உள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது குமரி முதல் காஷ்மீர் வரை நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார் ராகுல். இப்பயணத்தின் முடிவில் அவர் காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ஏற்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
இதற்கிடையே கட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிட்டாலும் போட்டியிடாவிட்டாலும் காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்திக்கு முதன்மையான இடமுண்டு என்று அதன் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். மேலும் சில மூத்த தலைவர்களும் ராகுல் கட்சிக்கு தலைமையேற்க வலியுறுத்தி உள்ளனர்.

