பாஜக ஆட்சி இல்லாத மாநிலங்களில் நீடிக்கும் மோதல் போக்கு
புதுடெல்லி: நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஆளுநர்கள், முதல்வர்களுக்கு இடையே நேரடியாகவும் மறைமுகமாகவும் மோதல் போக்கு நிலவி வருகிறது.
இதையடுத்து, ஆளுநர்களுக்கு உரிய அதிகாரங்களைக் குறைக்க வேண்டும் என மாநிலக் கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன.
குறிப்பாக, மாநிலங்களில் செயல்படும் பல்கலைக்கழகங்களுக்கான துணை வேந்தர்களை நியமிப்பதில் ஆளுநர்கள் குறுக்கிடுவதை ஏற்க இயலாது என மாநில அரசுகள் தெரிவித்துள்ளன.
தற்போது மேற்கு வங்கம், கேரளா, தெலுங்கானா, தமிழகம் ஆகிய நான்கு மாநிலங்களிலும் ஆளுநர், முதல்வர் இடையேயான மறைமுகப் பனிப்போர் குறித்து இந்திய ஊடகங்களில் பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
மேற்கு வங்கத்தில் ஆளுநருடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்து வருகிறார் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி. கடந்த பல மாதங்களாக மாநில அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைப் பகிரங்கமாக தெரிவித்து வந்தார் அம்மாநில ஆளுநராக பொறுப்பு வகித்த ஜகதீப் தங்கர். தற்போது இடைக்கால ஆளுநராக இல.கணேசன் பொறுப்பேற்றுள்ள நிலையில், அரசுக்கும் ஆளுநர் மாளிகைக்கும் இடையேயான மறைமுக மோதல் சற்றே தணிந்திருப்பதாக கூறப்படுகிறது.
இதேபோல், தெலுங்கானாவிலும் முதல்வர் சந்திரசேகர ராவுக்கும் அம்மாநில ஆளுநர் தமிழிசைக்கும் அவ்வப்போது மறைமுக மோதல் ஏற்பட்டு வருகிறது.
தமிழகத்தில் ஆளுநர் ரவிக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையே நேரடி மோதல் ஏதும் இல்லை என்றாலும், சில மசோதாக்களுக்கு ஆளுநர் மாளிகை ஒப்புதல் அளிப்பதில் மிகுந்த தாமதம் ஏற்படுவதாக திமுக அரசு குறை கூறியுள்ளது.
மேலும், பல்கலைக்கழக நியமனங்கள் உள்ளிட்ட சில விஷயங்களை ஆளுநர் மாளிகையின் தலையீட்டை ஏற்க இயலாது என்றும் திமுக தலைமை விமர்சித்து வருகிறது. இந்நிலையில், கேரளாவில் ஆளுநர், முதல்வர் இடையேயான மோதல் உச்சக் கட்டத்தை அடைந்துள்ளது.
அங்கு பல்கலைக்கழகங்களில் ஆளுநரின் அதிகாரத்தைக் குறைப்பது உள்ளிட்ட சில மசோதாக்களுக்கு ஆளுநர் ஆரிப் முகமது கான் ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டார்.
"மாற்றுக்கருத்து தெரிவிப்பவர்களின் குரலை ஒடுக்குவதில்தான் கேரள அரசின் முழுக் கவனமும் உள்ளது," என ஆளுநர் கூறியுள்ளார். ஆனால், ஆளுநர் சட்டப்படி செயல்பட மறுப்பதாக கேரள சட்ட அமைச்சர் பி.ராஜீவி சாடியுள்ளார்.

