செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
59b35a72-6cc3-4d75-8d54-3731b727ff44
-
Google News Preferred Icon

மரண தண்டனையை குறைப்பது குறித்து நெறிமுறைகள் வகுக்க நீதிபதி உத்தரவு

புதுடெல்லி: மரண தண்டனை வழங்கக்கூடிய வழக்குகளில், எந்தெந்த சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு தண்டனையைக் குறைக்க முடியும் என்பது தொடர்பான நெறிமுறைகளை வகுக்க உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பான தமது பரிந்துரையை ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் அமர்வுக்கு, தலைமை நீதிபதி யு.யு.லலித் அனுப்பி உள்ளார். "ஒரு வழக்கில் மரண தண்டனையை எதிர்கொள்ளும் குற்றவாளியின் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, அது எப்படி, எப்போது விசாரிக்கப்பட வேண்டும் என்பதில் தெளிவு, சீரான அணுகுமுறையைப் பெற இந்த விவகாரத்தை ஒரு பெரிய அமர்வு மூலம் விசாரிப்பது அவசியம் என்று கருதுகிறோம். எனவே, இதற்கான நெறிமுறைகளை உருவாக்குவதற்கான பரிந்துரை ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு அனுப்பப்படுகிறது," என தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

சிறுத்தைக்குப் பெயரிட்ட பிரதமர் மோடி

புதுடெல்லி: நமீபியா நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட எட்டு சிறுத்தைகளில் ஒன்றுக்கு பிரதமர் மோடி 'ஆஷா' என்று பெயர் சூட்டியுள்ளார். மற்ற ஏழு சிறுத்தைகளுக்கு சியாயா, சியாசா, சவன்னா, சஷா, ஃபெரெடி, ஒபன், சிபிலி எனப் பெயரிடப்பட்டுள்ளது. தொடக்கத்தில் சற்று மிரட்சியுடன் காணப்பட்ட அச்சிறுத்தைகள், தற்போது புதிய சூழலை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அவை பராமரிக்கப்படும் என்றும் தேசியப் பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சியாச்சினில் '5ஜி' இணையச் சேவை

ஸ்ரீநகர்: சியாச்சின் பனிமலையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இந்திய ராணுவ வீரர்களுக்கு '5ஜி' இணையச் சேவை வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து ராணுவத்தின் 14வது படைப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், "உலகின் மிக உயரமான போர்க்களமான சியாச்சின் பனிமலையில் 19,061 அடி உயரத்தில் செயற்கைக்கோள் அடிப்படையிலான இணையச் சேவை செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான 'பிபிஎன்எல்' சியாச்சினில் ராணுவத்துக்கு இணையச் சேவை வழங்குகிறது. எல்லையில் கிழக்கு லடாக் போன்ற பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த சில இடங்களில் ராணுவத்துக்கு சில தனியார் நிறுவனங்களும் இணையச் சேவை வழங்கி வருகின்றன.

பயங்கரவாதம்: கேரள ஆடவருக்கு சிறை

திருவனந்தபுரம்: ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு இந்தியாவில் ஆள் சேர்த்த குற்றச்சாட்டின் பேரில் கைதான, கேரளாவைச் சேர்ந்த ஷைபு நிஹார் என்ற ஆடவருக்கு, தேசியப் புலனாய்வு அமைப்பு நீதிமன்றம் ஐந்து ஆண்டு சிறைத்தண்டனை விதித்துள்ளது. இவர் வளைகுடா நாடுகளில் பணிபுரிந்தபோது ஐஎஸ் அமைப்பின் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்றுள்ளார். இதையடுத்து இந்தியா திரும்பிய ஷைபு நிஹாரை 2019ஆம் ஆண்டு தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்தது.