வாஷிங்டன்: இந்தியாவின் மின்னிலக்க எதிர்காலத்துக்கான ஆதரவை கூகல் தொடர்ந்து வழங்கும் என அதன் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள இந்தியத் தூதரகத்திற்கு முதல்முறை சென்ற அவர், அங்கு அமெரிக்காவிற்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்துவுடன் உரையாடினார்.
அப்போது, இந்தியாவுக்கும் கூகல் நிறுவனத்துக்கும் இடையேயான ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்பட்டதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
இந்தச் சந்திப்பு தொடர்பாக பின்னர் டுவிட்டரில் பதிவிட்ட அவர், இருவருக்கும் இடையேயான உரையாடல் சிறப்பாக அமைந்தமைக்கு நன்றி எனக் குறிப்பிட்டுள்ளார். வாஷிங்டனில் உள்ள தூதரகத்திற்கு இந்திய, அமெரிக்க தொழில்நுட்பத் தலைமை நிர்வாக அதிகாரி ஒருவர் வருவது இதுவே முதல் முறை என்கிறது அந்த ஊடகச் செய்தி.
"இந்தியாவிற்கான கூகல் நிறுவனத்தின் அர்ப்பணிப்பைப் பற்றி விவாதிக்கும் வாய்ப்பை அளித்ததற்காகப் பாராட்டுகிறேன். மேலும் இந்தியாவின் மின்னியல் எதிர்காலத்திற்கான எங்கள் ஆதரவு தொடர்வதை எதிர்நோக்குகிறோம்," என்று சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
மாற்றுத் தொழில்நுட்பம் குறித்தும், அதைச் செயல்படுத்துவதற்கான யோசனைகள் குறித்தும் இருவரும் பேசியதாக இந்தியத் தூதர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
"இந்திய-அமெரிக்க வர்த்தக உறவுகள், அறிவுசார், தொழில்நுட்பக் கூட்டாண்மையை விரிவுபடுத்துவது ஆகியவை தொடர்பாக கூகலுடன் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டோம்," என என்று இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்து தெரிவித்துள்ளார்.
கூகல் நிறுவனமானது இந்தியாவில் பெரும் முதலீடுகளைச் செய்துள்ளது. இளையர்களுக்குச் சிறந்த பயிற்சியை அளிப்பது, பல்வேறு துறைகளில் தடம் பதிப்பது எனத் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தி வருகிறது.