இந்தியாவில் வியாழக்கிழமையன்று (22 செப்டம்பர்) பயங்கரவாதத்திற்கு எதிராக நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனைகளில் 106 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் கைதான 10 பேரும் அவர்களில் அடங்குவர்.
நாட்டில் பயங்கரவாத செயல்களை அரங்கேற்ற ஆதரவு அளித்ததாகக் கூறப்பட்டதையொட்டி 'பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா' என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் கைதானதாக தேசிய புலனாய்வு முகவை அமைப்பைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
கேரளாவில்தான் ஆக அதிகமாக 22 பேர் பிடிபட்டனர். மகாராஷ்டிரா (20), கர்நாடகா (20), தமிழ்நாடு (10), அசாம் (9), உத்திரப் பிரதேசம் (8), ஆந்திரா (5), மகாராஷ்டிரா (4), புதுச்சேரி (3), புது டெல்லி (3), ராஜஸ்தான் (2) ஆகிய மாநிலங்களிலும் பலர் சிக்கினர்.
இதுபோன்ற ஆகப்பெரிய அளவில் சோதனை இப்போதுதான் நடக்கிறது என்று அதிகாரிகள் கூறினர்.
தேசிய புலனாய்வு முகவை, அமலாக்கத்துறை, மாநில காவல்துறை ஆகியவற்றின் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்வது, பயிற்சி முகாம்களை நடத்துவது, குறிப்பிட்ட அமைப்புகளில் சேரும்படி மக்களைத் தீவிரமாக மனம் மாற்றுவது ஆகியவற்றில் சம்பந்தப்பட்டிருப்பதாக நம்பப்படும் பேர்வழிகளின் வீடுகளில் சோதனைகள் நடந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
'பிஎஃஐ' எனும் 'பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா' அமைப்பு 2006ஆம் ஆண்டு கேரளாவில் அமைக்கப்பட்டது.
அதன் தலைமையைக்ம இப்போது புதுடெல்லியில் உள்ளது.
மனித உரிமைகளுக்கும் சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்டோரின் சுதந்திரத்திற்கும் பாடுபடும் தேசிய இயக்கம் என்று அந்த அமைப்பு தன்னைக் குறிப்பிட்டு வருகிறது.
அது சோதனைகளை கடுமையாகக் குறைகூறியது.
சோதனைகளை எதிர்த்து பல மாநிலங்களில் போராட்டங்கள் நடந்தன.
அவற்றில் கலந்துகொண்டவர்களும் கைதாயினர் என்று ஊடகத் தகவல்கள் கூறின.
சோதனைகள் புதன்கிழமை (21 செப்டம்பர்) பின்னிரவு ஒரு மணிக்குத் தொடங்கின.
வியாழக்கிழமை அதிகாலை ஐந்து மணிக்கு சோதனைகள் முடிவடையவிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அவற்றில் 1,500க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டனர்.
பல ஆவணங்கள், 100க்கும் மேற்பட்ட கோப்புகள், கைபேசிகள், மடிக்கணினிகள் உள்ளிட்டவற்றையும் அதகாரிகள் கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
சோதனைகள் தொடர்பில் உடனடியாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தலைநகரில் உயர்நிலைக் கூட்டம் வியாழக்கிழமையன்று நடந்தது.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா, புலனாய்வு முகவை பொது இயக்குநர் தின்கர் குப்தா ஆகியோருடன் திரு அமித் ஷா ஆலோசனையில் ஈடுபட்டார்.
சோதனைகள் பற்றியும் கைதானவர்கள் குறித்தும் அமைச்சர் அதிகாரிகளுடன் விவாதித்ததாக தகவல்கள் தெரிவித்தன.