புதுடெல்லி: ஒரு நிறுவனத்தில் இருந்தபடியே, போட்டி நிறுவனத்துக்கும் பணிபுரிந்து வந்த 300 ஊழியர்களை விப்ரோ தகவல் தொழில்நுட்ப நிறுவனம் பணியில் இருந்து நீக்கியுள்ளது.
இந்நடவடிக்கை தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் விவாதங்களையும் ஏற்படுத்தி உள்ளது.
ஒரு நிறுவனத்தில் பணியாற்றியபடியே, அதன் போட்டி நிறுவனத்துக்கும் மறைமுகமாக பணிபுரிவதை தகவல் தொழில்நுட்பத் துறையில் 'மூன்லைட்டிங்' என்று குறிப்பிடுகிறார்கள்.
இதுகுறித்து விப்ரோ நிறுவனம் கடந்த சில வாரங்களுக்கு முன்பே எச்சரிக்கை விடுத்துள்ளது.
இரு நிறுவனங்களில் பணியாற்றுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்ததைப் பொருட்படுத்தாத 300 ஊழியர்கள்தான் தற்போது பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அக்குறிப்பிட்ட 300 பேரும் போட்டி நிறுவனத்துக்கும் வேலை பார்த்து வந்தது உறுதியாகி உள்ளது என்றும் அவர்கள் பணி நியமன விதிமுறைகளின்படி, நிறுவனத்திற்கு நேர்மையாகவும் உண்மையாகவும் இருக்க வேண்டும் என்பதை அப்பட்டமாக மீறியுள்ளனர் என்றும் விப்ரோ நிர்வாகத் தலைவர் ரிஷாத் பிரேம்ஜி சுட்டிக்காட்டி உள்ளார்.
எனினும், கொரோனா நெருக்கடிக்குப் பின்னர், இதுபோன்ற நிலைமை ஏற்படும் என்பதை யூகித்த சில நிறுவனங்கள், தங்கள் ஊழியர்கள் இவ்வாறு இரு நிறுவனங்களில் பணியாற்றுவதை அனுமதிக்கின்றன.
டெக் மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் சிபி குருநானி, தனது ஊழியர்கள் கூடுதல் வருமானத்துக்காக இரண்டாவது வேலையைத் தேர்வு செய்வதில் தனக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
அதே சமயம், டிசிஎஸ் நிறுவனம், ஊழியர்கள் இரு இடங்களில் பணியாற்றுவதை ஒழுக்கமற்ற செயலாகப் பார்ப்பதாக தெரிவித்துள்ளது. இவ்வாறு செயல்படுவது குற்றச்செயலாகக் கருதுவதாக அதன் தலைமைச் செயலதிகாரி கணபதி சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
இன்ஃபோசிஸ் நிறுவனமும் தனது ஊழியர்கள் போட்டி நிறுவனத்தில் மறைமுகமாகப் பணியாற்றுவது தெரியவரும் பட்சத்தில், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.
ஒரு நிறுவனத்தில் குறிப்பிட்ட பொறுப்பை ஏற்றுக்கொண்டு வேலை பார்க்கும் தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள், தங்களது பணி நேரம் முடிந்த பிறகு பிற நிறுவனங்களுக்கு சில மணிநேரம் பணியாற்றும் வழக்கம் அதிகரித்து வருகிறது.
இதை சில நிறுவனங்கள் அனுமதித்தாலும், பெரும்பாலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்த 'மூன்லைட்டிங்' ஏற்பாட்டை முற்றிலுமாக எதிர்க்கின்றன.
இது ஒரு மோசடி வேலை என்றும் இந்த ஏமாற்று வேலையை ஏற்க இயலாது என்றும் விப்ரோ தலைவர் அசீம் பிரேம்ஜியும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், விப்ரோ நிறுவனம் ஊழியர்களில் 300 பேரை பணிநீக்கம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து ஊழியர்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.

