பள்ளிக்குள் நுழைந்த முதலை
லக்னோ: பள்ளிக்குள் முதலை நுழைந்ததால், மாணவர்களும் ஆசிரியர்களும் பீதியடைந்து ஓட்டம்பிடித்தனர். உத்தரப் பிரதேச மாநிலம், அலிகார் மாவட்டத்தில் உள்ள காசிம்பூர் கிராமத்தில் அண்மைய சில தினங்களாக கனமழை பெய்து வந்தது. இந்நிலையில், வெள்ளத்தால் அடித்து வரப்பட்ட முதலைகள் அவ்வப்போது குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்து வருகின்றன. நேற்று முன்தினம் காசிம்பூர் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் மாணவர்கள் வகுப்பறையில் பாடத்தைக் கவனித்துக் கொண்டிருந்தபோது, திடீரென முதலை ஒன்று புகுந்துவிட்டது. அதைக் கண்டு மாணவர்கள் ஓட்டம்பிடிக்க, பின்னர் கிராம மக்கள் உதவியுடன் அது உயிருடன் பிடிக்கப்பட்டது.
சூரியசக்தி தகடுகள் தயாரிப்புக்கு ரூ.19,500 கோடி ஊக்கத்தொகை
புதுடெல்லி: சூரியசக்தி தகடுகள் தயாரிப்புக்கு ரூ.19,500 கோடிக்கான உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதன்மூலம் ஆண்டுக்கு 65 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட சூரியசக்தி தகடுகள் நிறுவப்படும் என்றும் இத்துறையில் ரூ.94 ஆயிரம் கோடி முதலீட்டை ஈர்க்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், இத்துறையில் சுமார் இருநூறாயிரம் நேரடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் சூரியசக்தி தகடுகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வது குறையும் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஓராண்டுக்குள் புதுக்கட்சி தொடங்கப் போவதாக பிரஷாந்த் கிஷோர் அறிவிப்பு
பாட்னா: பீகார் மாநிலத்தில் லோக் தந்திரிக் தளம் என்ற அரசியல் கட்சியை அடுத்த ஓராண்டுக்குள் தொடங்கப்போவ தாக தேர்தல் வியூக நிபுணர் பிரஷாந்த் கிஷோர் தெரிவித்தார். அதற்கு முன்னதாக, மாநிலம் தழுவிய அளவில் மூவாயிரம் கிலோ மீட்டர் நடைப்பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். "ஆறு முதல்வர்களின் தேர்தல் வெற்றிக்கு உதவிய பிறகும் நல்லாட்சி இருப்பதாக என்னால் கூற முடியவில்லை. அதனால் களத்தை விட்டு வெளியேறினேன். எந்தவொரு அரசியல் கட்சிக்காகவும் இனி நான் பணியாற்ற மாட்டேன்," என்று பிரஷாந்த் கிஷோர் கூறினார்.
பழம் தராத பாகனை தூக்கிப்போட்டு மிதித்துக் கொன்ற யானை
போபால்: தனக்கு வழங்கப்பட்ட வாழைப்பழங்களைத் தராமல் ஏமாற்றிய பாகனை, யானை ஒன்று மிதித்துக் கொன்ற சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள செயோனி மாவட்டம் ரகிவாடா கிராமத்தைச் சேர்ந்த பரத் வாசுதேவ் என்பவர், ஹீரா என்ற பெண் யானையை வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் யானையுடன் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, லாரி ஓட்டுநர் ஒருவர், யானைக்குத் தருமாறு கூறி, ஒரு கூடை வாழைப்பழங்களை அளித்துச் சென்றார். ஆனால், பரத் அவ்வாறு செய்யாமல், பழங்களை தாம் வைத்திருந்த பையில் வைத்துக்கொண்டதாகத் தெரிகிறது. இதனால் கோபடைந்த யானை, தனது பாகன் என்றும் பாராமல் பரத் வாசுதேவனை தும்பிக்கையால் தூக்கி அடித்து, காலால் மிதித்து கொன்றது.

