"நாங்கள் மகாராஷ்டிராவில் இருந்து சுமார் 200 அல்லது 300 ஆண்டுகளுக்கு முன் தெற்கே தமிழ்நாட்டுக்கு வந்தவர்கள்," என்கிறார் கொளஞ்சியப்பன் என்கிற 35 வயது குடுகுடுப்பைக்காரர்.
மணல்மேடு என்ற பேரூருக்கு அருகே வில்லியநல்லூர் என்ற கிராமத்தில் குடுகுடுப்பை சத்தம் கேட்டு, அங்கே போய் பார்த்தபோது கொளஞ்சியப்பன் ஒரு குடும்பத்திற்குக் குறி சொல்லிக்கொண்டு இருந்தார். அவரிடம் கொஞ்சம் பேச்சு கொடுத்தபோது, எழுத்து வடிவம் இல்லாத ஒரு வகை மராத்தி மொழியைத் தாங்கள் பேசுவதாக அவர் கூறினார்.
பண்ருட்டி, புதுப்பேட்டை, ராஜ மன்னார்குடி, அரியலூர், ஆலத்தூர், கடலூர், நேம்பூர், வடலூர் உள்ளிட்ட பல இடங்களில் தாங்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வசிப்பதாகக் கூறிய கொளஞ்சியப்பன், "சவான், பாகோத் போன்ற பல பிரிவுகள் எங்களிடம் உண்டு, நான் சவான் பிரிவைச் சேர்ந்தவர்," என்றும் தெரிவித்தார்.
வடலூர் புறநகர்ப் பகுதியில் சுமார் 70 குடும்பங்கள் வசிக்கின்றன. அவற்றில் இவரின் குடும்பமும் ஒன்று. இவரின் 12 வயது பையன் பள்ளியில் 7வது வகுப்பில் படிக் கிறார். எட்டு வயது மகள் 3வது படிக் கிறார். இவரின் மனைவி, தன் ஊருக்கு அருகே பல பகுதிகளுக்கும் சென்று சுருக்குப்பை விற்பார்.
"எங்களிடம் மயில்தோகையை வைத்துக்கொண்டு குறி சொல்வோர், மை வித்தை செய்வோர், குடுகுடுப்பையைக்கொண்டு குறி சொல்வோர் என பல வகை உண்டு.
"ஜக்கம்மாதான் எங்கள் குல தெய்வம். வடலூர் அருகே ஜக்கம்மா முத்து மாரியம்மன் கோயில் என்ற கோயிலைக் கட்டி ஆடி மாதம் திருவிழா நடத்துகிறோம்.
"யுகாதிப் பண்டிகையைக் கொண்டாடுவோம். வேப்பிலை, வெல்லம் வாங்கிச் சென்று பாகோத் பிரிவைச் சேர்ந்தவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கிக்கொள்வோம். மஞ்ச பையில் வேப்பிலை, வெல்லத்தைப் போட்டுக்கொடுப்பார்கள்.
"கொள்ளிவாய்ப் பிசாசு, பேய், உள்ளிட்ட பயங்கர கெட்ட சக்திகள், பட்டையை உரிக்கும் கோடையில் உறும நேரத்தில் (பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரைப்பட்ட நேரம்) இடுகாடுகளுக்கு வரும்.
"கடும் குளிர் நிலவும் மார்கழி மாதத்தில்தான் அவை அதிகமாக அங்கு தங்கும். ஆகையால் நாங்கள் மார்கழி மாதத்தில் மட்டும் வெளியூர்களுக்குப் போகாமல் வடலூருக்கு அருகே இருக்கும் பெரிய இடுகாட்டில் நடுச்சாமத்தில் பூசை நடத்துவோம்.
"ஆண்கள் எல்லாரும் அங்கு சென்று படையல் வைத்து சூடம் கொளுத்தி, எல்லாரும் குடுகுடுப்பையை ஒரே நேரத்தில் அடித்து எங்கள் ஜக்கம்மாவை அழைப்போம்.
"எங்கள் ஜக்கம்மா வந்து எங்களுக்கு அருள் புரிவதோடு, பேய் பிசாசு போன்ற கெட்ட சக்திகள் இடுகாடுகளில் இருந்து வெளியே வர முடியாமல் அவற்றை அங்கேயே கட்டிப்போட்டுவிடும்.
"ஓராண்டு காலத்திற்கு அவை ஊருக்குள் வர முடியாது. ஆகை யால் யாருக்கும் கெடுதல் செய்ய இயலாது. இடுகாட்டுப் படையல் முடிந்ததும் எங்களில் சிலருக்கு மண்டைஓடு, மை கிடைக்கும். அதை அவர்கள் எடுத்துக் கொள் வார்கள்," என்று கொளஞ்சியப்பன் கூறியதை எல்லாம் கேட்டபடி நின்றிருந்தேன். அவர் தொடர்ந்தார்.
"அந்த பூசை முடிந்ததும் எங்கள் ஊரைச் சுற்றிலும் உள்ள பல ஊர் களுக்கும் நள்ளிரவு நேரத்தில் சென்று வீடுவீடாக குடுகுடுப்பை யுடன் குறி சொல்வோம். பிறகு தைப்பொங்கல் அன்று எங்களுக்கு ஒவ்வொரு வீட்டினரும் பணம், துணிமணி கொடுப்பார்கள்.
"இது முடிந்ததும்தான் ஆண்கள் தொலைதூர வெளியூர்களுக்குக் கிளம்புவோம். வழியில் ஆங்காங்கே பள்ளிக்கூடங்கள், பழைய கட்ட டங்கள், புளிய மரத்தடிகள் போன்ற இடங்களில் தங்குவோம்.
"இரவில் ஜக்கம்மாவை கூப்பிட்டு அவரை வணங்கிவிட்டு பின்னிரவு 1 மணிக்குப் பிறகு புறப்பட்டு, ஊர் உள்ளே சென்று ஒவ்வொரு வீட்டிற்கும் வெளியே நின்றபடி குடுகுடுப்பையை அடித்து அந்தக் குடும்பத்திற்கான நல்லது கெட்டது பலவற்றையும் சொல்லி விட்டு செல்வோம்.
"பிறகு காலையில் மீண்டும் செல்வோம். பகல் நேரத்திலும் குடு குடுப்பையை அடித்தபடி குறி சொல்வோம். ஆனால் இரவில் சொல்வது நாங்கள் அறியாமல் சொல்வதாக இருக்கும். வீடுகளில் கொடுப்பதை வாங்கிக்கொள்வோம். ஒரு நாளில் ரூ.500 கிடைக்கும். ரூ.100ம் கிடைக்கும். சொல்ல முடியாது.
"இப்படி பிழைக்கும் நாங்கள் சராசரியாக மாதம் ஒரு முறை எங்கள் ஊருக்குச் சென்று குடும்பத்தாருடன் சில நாட்கள் இருந்துவிட்டு மீண்டும் தொலைதூர வெளி யூர்களுக்குக் கிளம்புவோம்," என்றார் குடுகுடுப்பை கொளஞ்சியப்பன். இவர்கள் வழக்கப்படி பெண் வீட்டார் வரதட்சணை கொடுப்பது உண்டு. ஆனால் கட்டாயம் கிடை யாது. திருமணத்தில் தாலி கிடை யாது. மணமகன் வெறும் கறுப்பு மணிதான் கட்டுவார். மணமக்கள் தலையில் எருக்கம் பூ இருக்கும்.
வீட்டில் வளரும் பூனை, அணில் போன்றவற்றைச் சாப்பிடுவார்களாம்.
கொளஞ்சியப்பன் கழுத்தில் மணிமாலைகள் அணிந்து இருந்தார். தாயத்து போட்டு இருந்தார், கையில் பச்சை குத்திக்கொண்டு இருந்தார். மஞ்சள்துணி முண்டாசுடன் காணப்பட்டார்.
குடுகுடுப்பையை அடித்துக் காட்டுங்கள் என்று கேட்டபோது அதை லாவகமாக அடித்தார்.
"குடுகுடுப்பையை முன்பு மரத்தில் குடைந்து செய்தோம்.
"இப்போது இரண்டு அங்குல பிளாஸ்டிக் குழாயை இரு புறங்களி லும் திறப்பு இருப்பதுபோல் சிறு துண்டாக வெட்டி அதை உடும்புத் தோலால் கெட்டியாக மூடி இறுக்க மாக தைத்துவிடுவோம்.
நூலில் முடியப்பட்ட சிறிய மணி இரு புறமும் அடித்து அடித்து ஒலியை எழுப்புகிறது.
"பிழைப்பு சிரமமாகிவிட்டது. வேறு தொழிலுக்கு மாறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. அர சாங்கத்தை அணுகி சாதி சான்றிதழ் பெற நாங்கள் படாதபாடுபட்டு வரு கிறோம். பெரும் பணம் கொடுக்க வேண்டிய நிலை இருக்கிறது.
"இதுவரை சுமார் 30 அல்லது 40 பேர் வரை சான்றிதழ் பெற்று விட்டோம். என் மகனுக்குக் கிடைத்துவிட்டது. மகளுக்கு இன்னமும் கிடைக்கவில்லை.
'இந்து கணிக்கர் எஸ்டி' என்று சான்றிதழ் கொடுத்துள்ளனர்.
"எங்களைச் சேர்ந்த சுமார் 10 பிள்ளைகள் கல்லூரிப் படிப்பு படிக் கிறார்கள்," என்று கூறிய கொளஞ் சியப்பன், தான் அறவே படிக்காதவர் என்றார்.
சொல்லிவிட்டு குடுகுடுப்பையை அடித்தபடி அந்த இடத்தைவிட்டு நகர்ந்தார் கொளஞ்சியப்பன்.
அவர் குறி சொன்ன குடும்பத் தைச் சேர்ந்த மாதைக் கேட்டபோது, இரவில் குடுகுடுப்பைக்காரர் சொன்னது ஓரளவுக்குச் சரியாகவே இருக்கிறது என்றார். இந்த மாது தன் பெயரைச் சொல்ல மறுத்து விட்டார். அருகே இருந்த செல்வம் என்ற பழக்கடைக்காரரும் அப்படியே சொன்னார்.

