உதவிகேட்டு பலர் முற்றுகை; ரூ.25 கோடி வென்றவர் புலம்பல்

உதவிகேட்டு பலர் முற்றுகை; ரூ.25 கோடி வென்றவர் புலம்பல்

2 mins read
ef890838-2359-4f5e-9f22-cb8b1c53d21d
-

திருவனந்தபுரம்: லாட்டரியில் ரூ.25 கோடி பரிசு விழுந்தபோது மகிழ்ச்சி அடைந்தவர், இப்போது அதை எண்ணிப் புலம்பும் நிலைக்கு ஆளாகியுள்ளார்.

கேரள மாநி­லத்­தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்­டு­ந­ரான 30 வய­தான அனூப்­புக்கு (படத்­தில் தம் மக­னு­டன்) அண்­மை­யில் லாட்­ட­ரி­யில் ரூ.25 கோடி பரிசு விழுந்­தது. வரி­கள் கழிக்­கப்­பட்­ட­பின் கிட்­டத்­தட்ட ரூ.16 கோடி இவ­ருக்­குக் கிடைக்­கும் எனக் கூறப்­ப­டு­கிறது.

குடும்பத்தின் நிதிச்சுமையைப் போக்க மலேசியா சென்று வேலை பார்க்க இவர் நினைத்திருந்த நிலையில், அதிர்ஷ்டம் இவரது கதவைத் தட்டியது.

இந்நிலையில், நாள்தோறும் பண உதவி கேட்டு பலரும் இவரது வீட்டை முற்றுகையிட்டு வருவதால் நிம்மதியை இழந்து, புலம்பி, ஃபேஸ்புக்கில் ஒரு காணொளிப் பதிவை இட்டுள்ளார் திரு அனூப்.

"பரிசு விழுந்ததும் அளவில்லா மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால், இப்போது நிலைமை நாளுக்கு நாள் மாறி வருகிறது. என்னால் வீட்டைவிட்டு வெளியே செல்ல முடியவில்லை.

"இப்போது என் சகோதரியின் வீட்டில் இருக்கிறேன். வீடு மாறிய படியே இருந்தாலும் பலரும் அதனைக் கண்டுபிடித்து வந்து விடுகின்றனர். எல்லாரும் உதவி கேட்கின்றனர். என் கைக்கு இன்னும் பணம் வந்து சேரவில்லை. இதை யாரும் நம்ப மறுக்கின்றனர்.

"உடல்­நிலை சரி­யில்­லாத என் மகனை மருத்­து­வ­ம­னைக்கு அழைத்­துச் செல்­லக்­கூட முடி­ய­வில்லை. நான் வேலைக்­குச் சென்று இரண்டு மாதங்­க­ளா­கி­விட்­டன என்­பதே உண்மை. இப்போது அண்டைவீட்டார்கூட எதிரிகளாகிவிட்டனர்," என்று கூறிப் புலம்பினார் அனூப்.

இத­னால், தனக்கு முதல் பரிசு விழா­மல் 2ஆம் பரிசு (ரூ.5 கோடி) அல்­லது 3ஆம் பரிசு (ரூ.1 கோடி) விழுந்­தி­ருக்­க­லாம் என்­று­ நினைப்­பதாக இவர் கூறினார்.

திரு அனூப் வருத்தத்துடன் வெளியிட்ட காணொளியைத் தொடர்ந்து, அவருக்கு ஒரு நாள் நிதி மேலாண்மைப் பயிற்சி அளிக்க இருப்பதாக கேரள மாநில லாட்டரித் துறை அறிவித்து இருக்கிறது.