டேராடூன்: இளம்பெண் கொலையில் தம்முடைய மகன் கைது செய்யப்பட்டதை அடுத்து, உத்தராகண்ட் மாநில மூத்த பாஜக தலைவரும் முன்னாள் அமைச்சருமான வினோத் ஆர்யாவும் அவரது இன்னொரு மகன் அங்கித் ஆர்யாவும் கட்சியைவிட்டு நீக்கப்பட்டனர்.
ரிஷிகேஷில் இருந்து 10 கி.மீ. தொலைவில் ஒரு சொகுசு விடுதியை நடத்தி வந்தார் வினோத் ஆர்யாவின் மகனான புல்கித் ஆர்யா.
இந்நிலையில், அங்கு வரவேற்பாளராகப் பணியாற்றிவந்த 19 வயது இளம்பெண் கடந்த திங்கட்கிழமையிலிருந்து மாயமானார்.
இதனையடுத்து, அவர் கொல்லப்பட்டதாகக் கூறி, அதன் தொடர்பில் புல்கித் ஆர்யா, விடுதி மேலாளர் சௌரப் பாஸ்கர், துணை மேலாளர் அங்கித் குப்தா ஆகியோரைக் காவல்துறை நேற்று முன்தினம் கைதுசெய்தது.
அவர்கள் அப்பெண்ணைப் பாலியல் தொழிலில் தள்ள முயன்றதாகக் கூறப்படும் நிலையில், காவல்துறை அதனை உறுதிப்படுத்தவில்லை.
இந்நிலையில், அப்பகுதியில் உள்ள ஒரு கால்வாயில் இருந்து அந்த இளம்பெண்ணின் உடல் நேற்று மீட்கப்பட்டது.
முன்னதாக, மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமியின் உத்தரவை அடுத்து, நேற்று முன்தினம் அந்த சொகுசு விடுதி இடித்துத் தள்ளப்பட்டது. குற்றமிழைத்தவர்கள் எவராக இருப்பினும் கடுமையாகத் தண்டிக்கப்படுவர் என்று திரு தாமி உறுதியளித்துள்ளார்.

