புதுடெல்லி: மின்னணுப் பொருள்களை உற்பத்தி செய்யும் உலகப் பெருநிறுவனங்கள் சீனாவிலிருந்து வெளியேறும் வேளையில் இந்தியாவில் கூட்டுத் தொழில் தொடங்குவதில் ஆர்வம் காட்டுகின்றன.
எடுத்துக்காட்டாக, உலகின் ஆகப் பெரிய மின்னணுப் பொருள் உற்பத்தி நிறுவனமான 'ஃபாக்ஸ்கான்', இந்தியாவின் வேதாந்தா நிறுவனத்துடன் கைகோத்துள்ளது. குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரில் இவை பகுதி மின்கடத்திகளை உற்பத்தி செய்யும் நிறுவனத்தைத் தொடங்கவிருக்கின்றன.
கிட்டத்தட்ட 28 பில்லியன் வெள்ளி மதிப்பிலான இந்தக் கூட்டு நிறுவனம் அடுத்த ஈராண்டில் செயல்படத் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.
உலகளாவிய மின்னணுப் பொருள் உற்பத்தி நடுவமாக விளங்கும் சீனாவில் அண்மைக் காலமாக கொவிட்-19 கிருமிப்பரவல் தொடர்பான முடக்கநிலை, அமெரிக்காவுடனான அரசியல் பதற்றம் ஆகியவை நிலவுவதால், நிறுவனங்கள் மாற்று ஏற்பாட்டில் கவனம் செலுத்துகின்றன.
ஆப்பிள், சம்சுங், கூகல் போன்ற நிறுவனங்கள் ஏற்கெனவே இந்தப் பாதையில் உறுதியாக அடியெடுத்து வைத்துள்ளன. இவ்வாறு தொடங்கப்படும் புதிய நிறுவனங்களுக்கு இந்திய அரசாங்கமும் நிதி உதவியை அறிவித்துள்ளது.
இந்திய வணிகக் குழுமங்களான 'ரிலையன்ஸ்', டாட்டா குழுமம் போன்றவை இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி வெளிநாட்டு மின்னணுப் பொருள் உற்பத்தி நிறுவனங்களுடன் இணைந்து கூட்டுத் தொழிலில் களமிறங்க முனைந்துள்ளன.
ஊழியர்க்கான குறைவான ஊதியம், பன்முகம் கொண்ட தொழில்துறை அடித்தளம் ஆகிய அம்சங்கள், வெளிநாட்டு நிறுவனங்களை இந்தியாவின்பால் ஈர்க்கும் என்று கருதப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் அதன் 'ஐஃபோன்' தயாரிப்பை விரிவுபடுத்தத் திட்டமிடுகிறது.
'சியாவ்மி', 'ஒப்போ' போன்ற சீன திறன்பேசி நிறுவனங்களும்கூட இந்தியாவில் உற்பத்தி ஆலைகளை நிறுவியுள்ளன.