புனே: மற்ற நாடுகளின் நாணயங்களோடு ஒப்பிடுகையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நன்றாகவே உள்ளது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிறார்.
அண்மையில், ஒரு டாலருக்கு நிகரான மதிப்பு 81 ரூபாயைத் தாண்டியது. இது இந்திய ரூபாயின் மதிப்பில் வரலாறு காணாத வீழ்ச்சியாகக் கருதப்படுகிறது.
ஒரு டாலருக்கு நிகராக 39 காசுகள் சரிந்து இந்திய ரூபாயின் மதிப்பு முதல் முறையாக 81.27 ஆக உள்ளது.
அமெரிக்க மத்திய வங்கி அதன் வட்டி விகிதங்களை உயர்த்தியதை அடுத்து இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளது.
இந்நிலையில், புனேயில் இதுகுறித்துப் பேசிய அமைச்சர் நிர்மலா, ரிசர்வ் வங்கியும் நிதி அமைச்சும் நிலைமையை அணுக்கமாகக் கவனித்து வருவதாகக் கூறினார்.
இந்திய ரூபாயின் மதிப்பு சரிவதால் வெளிநாட்டுப் பயணச் செலவு அதிகமாகும் அபாயம் உள்ளது.
வெளிநாடுகளில் பயிலும் மாணவர்களின் கல்விச் செலவும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
உக்ரேன்மீதான ரஷ்யாவின் படையெடுப்பால் உலகெங்கும் நாணய மதிப்பு சரிந்து வருவதாகக் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
விலைவாசி, பணவீக்கம் ஆகியவை அதிகரித்ததை அவர்கள் சுட்டினர்.

