கேரளாவைச் சேர்ந்த பழம்பெரும் காங்கிரஸ் தலைவர் காலமானார்
கோழிக்கோடு: கேரளாவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பழம்பெரும் தலைவர் ஆரியதான் முகமது காலமானார். அவருக்கு வயது 87. எட்டு முறை சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய இவர், மூன்று முதல்வர்களின் அமைச்சரவையில் இடம்பெற்றவர். தொழிலாளர் துறை, வனத்துறை, சுற்றுலாத்துறை, மின்சாரத்துறை ஆகியவற்றுக்கு அமைச்சராகச் செயலாற்றிய அனுபவமிக்க இவர் உடல்நலக்குறைவால் காலமானார்.
அடுத்த மாதம் முதல் 5ஜி சேவை
புதுடெல்லி: அதிவேக இணைய வசதியைத் தரும் 5ஜி தொழில்நுட்பச் சேவை அடுத்த மாதம் அறிமுகமாவது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 1 முதல் 4ஆம் தேதி வரை நடைபெறும் 'இந்தியா மொபைல் காங்கிரஸ்' மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி இதனைத் தொடங்கி வைப்பார்.
மருத்துவமனை தீ விபத்தில் மூவர் பலி
ரேணிகுண்டா: ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா பகுதியில் கட்டி முடிக்கப்படாத மருத்துவமனைக் கட்டடத்தில் நேற்று அதிகாலை தீ மூண்டது. கட்டடத்தின் நான்காவது மாடியில் மருத்துவர் ரவிசங்கர் ரெட்டி குடும்பத்துடன் தங்கியிருந்தார். அந்தத் தளம் முழுவதும் பரவிய தீயில் இருந்து முதலில் இருவர் மீட்கப்பட்டனர். தீயின் உக்கிரத்தால் மருத்துவர், அவரது மகன், மகள் மூவரையும் மீட்கத் தாமதமானது. பின்னர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட மூவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். தீ மூண்டதற்கான காரணம் குறித்து விசாரணை இடம்பெறுகிறது.
ரூ.167 கோடிக்கும் மேல் மதிக்கத்தக்க போதைப்பொருள் பறிமுதல்
சாம்பை: மிசோரமின் சாம்பை மாவட்டத்தில் சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகளிடம் சந்தேகத்திற்குரிய முறையில் வாகனத்தில் சுற்றித்திரிந்த மாது பிடிபட்டார். அவரிடமிருந்து 55 கிலோகிராமுக்கும் அதிகமான எடையுள்ள போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு 167.86 கோடி ரூபாய் என்று அதிகாரிகள் கூறினர். மாது கைது செய்யப்பட்டுள்ளார்.

