மும்பை: மகாராஷ்டிர மாநிலம் சாங்லி மாவட்டத்தில் அமைந்துள்ளது மோஹித்யாஞ்சே வத்காவோன் எனும் கிராமம்.
இங்குள்ள மக்கள் ஒரு விந்தையான பழக்கத்தை அண்மை நாள்களாகக் கடைப்பிடித்து வருகின்றனர். அன்றாடம் இரவு ஏழு மணி முதல் எட்டரை மணி வரை ஊர் முழுவதும் கேட்கும்படி ஒரு சமிக்ஞை ஒலி ஒலிக்கும்.
அதனையடுத்து தொலைக்காட்சி, கணினி, கைத்தொலைபேசி உள்ளிட்ட மின்னிலக்க சாதனங்களை அணைத்துவிட்டு ஊர் மக்கள் அனைவரும் புத்தகம் படித்தல், உரையாடுதல், மாணவர்கள் தங்கள் சந்தேகங்களைப் பிறரிடம் கேட்டுத் தீர்த்துக்கொள்ளுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.
யாரும் இணையத்திலோ சமூக வலைத்தளங்களிலோ எதையும் பார்ப்பதில்லை. ஒன்றரை மணி நேரத்தின் முடிவில் இரவு எட்டரை மணிக்கு மீண்டும் சமிக்ஞை ஒலி எழுப்பப்படுகிறது.
கிராமத் தலைவர் விஜய் மோஹிதே பரிந்துரைந்த இந்த யோசனையை ஊர் மக்கள் அனைவரும் உவகையுடன் பின்பற்றுவதாகக் கூறப்பட்டது.
மக்கள் மின்னிலக்க நச்சு உலகத்திலிருந்து சற்று நேரம் விலகி ஆரோக்கியமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதைக் கண்காணிக்க பகுதி வாரியாக குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதாக கிராமத் தலைவர் கூறினார்.

