ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சிக்கு மீண்டும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அங்கு தற்போது துணை முதல்வராக உள்ள சச்சின் பைலட்டை முதல்வராக்குவதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அடுத்த மாதம் நடைபெற உள்ள காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிடுகிறார் அசோக் கெலாட்.
அத்தேர்தலில் அவர் வெற்றி பெறும் பட்சத்தில், ராஜஸ்தானில் புதிய முதல்வர் பொறுப்பேற்க வேண்டியிருக்கும். இதையடுத்து, சச்சின் பைலட்டை முதல்வராக்க ராகுல் விரும்புவதாகக் கூறப்படுகிறது.
ஆனால், நடப்பு முதல்வர் அசோக் கெலாட் தரப்பினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் 90க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் சச்சின் பைலட்டுக்கு எதிராக வரிந்துகட்டி உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ராஜஸ்தான் ஆளுநரை நேரடியாகச் சந்தித்து 90 எம்எல்ஏக்களும் தங்கள் பதவி விலகல் கடிதத்தை அளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, இருதரப்பினரையும் சமாதானப்படுத்த காங்கிரஸ் கட்சித் தலைமை மேலிடப் பார்வையாளர்களை அனுப்பி வைத்துள்ளது. அடுத்த ஓரிரு தினங்களில் இப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என காங்கிரஸ் மேலிட வட்டாரங்கள் தெரிவித்தன.

