ஸ்ரீநகர்: நெடுஞ்சாலை சீரமைப்புப் பணிகள் காரணமாக காஷ்மீரில் விளையும் ஆப்பிள்களை நாட்டின் பிற பகுதிகளுக்கு கொண்டு செல்வது தடைபட்டுள்ளது.
தற்போது காஷ்மீர் நெடுஞ்சாலைகளில், காஷ்மீர் ஆப்பிள்களுடன் சுமார் எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட சரக்கு வாகனங்கள் வரிசையில் காத்துக்கிடக்கின்றன.
சாலைப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் இந்த வாகனங்கள் முன்னேறிச் செல்ல முடியவில்லை. இதனால் அவற்றில் ஏற்றப்பட்டுள்ள சுமார் நூறு கோடி ரூபாய் (S$17.6 மில்லியன்) மதிப்புள்ள ஆப்பிள்கள் அழுகி பயனற்றுப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது என காஷ்மீர் பள்ளத்தாக்கு பழ உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.
பழ உற்பத்தி தொடர்பான நடவடிக்கைகளில் சுமார் மூன்று மில்லியன் பேர் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் பொருளாதார நிலை இந்த வேலையை நம்பியே உள்ளது.
இந்நிலையில் நெடுஞ்சாலை, போக்குவரத்து மேலாண்மையில் காஷ்மீர் நிர்வாகம் அலட்சியமாக இருந்துவிட்டதாக குற்றம்சாட்டி விவசாயிகள் கடந்த ஞாயிறு, திங்கட்கிழமைகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக காஷ்மீர் பள்ளத்தாக்கில் இயங்கி வரும் பத்து முக்கியப் பழச் சந்தைகள் மூடப்பட்டிருந்தன.
நடப்பாண்டில் காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் பலத்த மழை பெய்ததன் காரணமாக, அங்கு 2.1 மில்லியன் மெட்ரிக் டன் ஆப்பிள்கள் உற்பத்தியாகி உள்ள நிலையில், போக்குவரத்து பாதிப்பு காரணமாக விவசாயிகள் பெரும் இழப்பை எதிர்நோக்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.