செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
863bb7bc-6fe8-4d2c-a90c-4227a59ca280
-

மின்கசிவால் தீப்பற்றிய வீட்டில் மருத்துவரும் இரு குழந்தைகளும் பலி

அமராவதி: மின்கசிவு காரணமாக வீட்டில் தீப்பற்றிய சம்பவத்தில் மருத்துவரும் அவரது இரு குழந்தைகளும் உடல் கருகி பலியாகினர். இச்சம்பவம் ஆந்திர மாநிலம் ரேனிகுண்டா பகுதியில் நிகழ்ந்தது. அங்கு மருத்துவர்களான் ரவிசங்கரும் அவரது மனைவியும் மருத்துவமனை நடத்தி வருகின்றனர். கட்டடம் ஒன்றின் கீழ் தளத்தில் மருத்துவமனை இயங்கி வரும் நிலையில், இரண்டாவது மாடியில் அவர்கள் வசித்து வந்தனர். நேற்று முன்தினம் அதிகாலை கட்டடத்தில் மின்கசிவால் தீப்பற்றியது. இதனால் இரண்டாம் தளத்தில் கரும்புகை பரவியது. இதில் மருத்துவர் ரவிசங்கர் உடல் கருகி உயிரிழந்தார். தீயைக் கண்டு பயந்து குளியலறையில் ஒதுங்கிய குழந்தைகள் இருவரும் மூச்சு திணறி உயிரிழந்தனர்.

மோடி: சண்டிகர் விமான நிலையத்துக்கு பகத் சிங் பெயர் சூட்டப்படும்

புதுடெல்லி: இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களின் லட்சியங்களைப் பின்பற்றி, அவர்கள் கனவுகண்ட இந்தியாவை உருவாக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார். 'மனத்தின் குரல்' நிகழ்ச்சிக்காக வானொலியில் உரையாற்றிய அவர், சண்டிகர் விமான நிலையத்துக்கு பகத் சிங் பெயர் சூட்டப்படும் என்றார். "நவராத்திரி, காந்தி ஜெயந்தி, தசராவை முன்னிட்டு, காதி, கைத்தறி, கைவினைப் பொருள்களை மக்கள் அதிக அளவில் வாங்க வேண்டும். அதன்பின், தீபாவளி கொண்டாடப்பட உள்ளது. மக்கள் உள்ளூர் பொருள்களை வாங்கி, உள்ளூர் வியாபாரிகளுக்கு ஆதரவளிக்க வேண்டும்," என்றார் பிரதமர் மோடி.

5,202 தீவிரவாதிகள் கைது; ஒருவருக்கு மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது

கௌஹாத்தி: கடந்த 12 ஆண்டுகளில் அசாமில் 5,202 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர்களில் ஒரே ஒருவருக்கு மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்றும் அம்மாநில காவல்துறைத் தரவுகள் தெரிவிக்கின்றன. மேலும், கைதானவர்களில் 2,606 பேர் மீது மட்டுமே இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் மற்ற வழக்குகளின் விசாரணை நிலுவையில் உள்ளது என்றும் தெரியவந்துள்ளது.

நடிகை ஜாக்குலினுக்குப் பிணை

புதுடெல்லி: தொழிலதிபரிடம் ரூ.200 கோடி பெற்று மோசடி செய்ததாக தொடுக்கப்பட்டுள்ள வழக்கில் இந்தி நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டசுக்கு டெல்லி நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டது. இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியான அரசியல் தரகர் சுகேஷ் சந்திரசேகர், மோசடியாக பெற்ற பணத்தைக் கொண்டு ஜாக்குலினுக்கு கோடிக்கணக்கான மதிப்புள்ள பரிசுப் பொருள்களை அளித்துள்ளார். இதையடுத்து ஜாக்குலின் பெயரும் இவ்வழக்கின் குற்றப்பத்திரிக்கையில் இடம்பெற்றுள்ளது.