'ஆன் இந்தியா' ஆய்வறிக்கையில் தகவல்
புதுடெல்லி: இந்தியாவில் அடுத்த ஆண்டு ஊதிய விகிதங்கள் 10.4 விழுக்காடு அதிகரிக்கும் என அண்மைய கணிப்பில் தெரிய வந்துள்ளது.
மந்தநிலையும் உள்நாட்டுப் பணவீக்கமும் நிலவினாலும், இந்தியாவில் நடப்பு 2022ஆம் ஆண்டு ஊதிய விகிதம் 10.6 விழுக்காடாக உள்ளது. இது கடந்த பிப்ரவரி மாதம் கணிக்கப்பட்ட 9.9% அதிகரிப்பைவிட சற்று கூடுதலாகும்.
வருமான உயர்வு குறித்த 'ஆன் இந்தியா'வின் 28வது ஆண்டு ஆய்வு அறிக்கை அண்மையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் பல்வேறு முக்கிய விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்தியாவில் மின் வணிகத்துறையானது, அடுத்த ஆண்டில் 12.8% ஊதிய உயர்வுடன் உலகச் சந்தையில் முன்னிலை வகிக்கும் என்றும் அதற்கு அடுத்த இடத்தில் 12.7% ஊதிய உயர்வுடன் துளிர் (ஸ்டார்ட் அப்) நிறுவனங்கள் இடம்பெறும் என்றும் திங்கட்கிழமை வெளியான ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாற்பதுக்கும் மேற்பட்ட தொழில்துறைகளில் இருக்கும் 1,300 நிறுவனங்களின் தரவுகளைப் பகுப்பாய்வு செய்து ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
அதில் குறிப்பிடப்பட்டுள்ள கணிப்புகளின் அடிப்படையிலான போக்கு அடுத்த சில மாதங்கள் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
"இப்போது மட்டுமல்லாமல் எதிர்காலத்திலும் தங்கள் ஊழியர்கள் நிறுவனத்துக்கு ஆதரவாக இருப்பதையும் நிறுவனத்தின் மீது நம்பிக்கை கொண்டிருப்பதையும் நிறுவனத் தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும்.
"இதற்கேற்ப முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். மேலும், நிறுவனத் தலைவர்கள் தங்களுடைய மொத்த பயன்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும்," என 'ஆன் இந்தியா' ஆய்வறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஹை-டெக், தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் 11.3%, நிதி நிறுவனங்கள், அமைப்புகளில் 10.7% அளவில் ஊதிய உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஊதியம் மீதான அழுத்தம் மேலும் சில காலம் நீடிக்கும் என்ற போதிலும், அனைத்து துறைகளிலும் ஊதியம் அதிகரிக்கும் என்பதே நிச்சயமான தகவல் என்று 'ஆன் இந்தியா' தனது ஆய்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.
ஊதிய உயர்வு குறித்த இந்த தகவல்கள் தனியார் துறையில் பணியாற்றுவோர்க்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது என்கிறார்கள் பொருளியல் நிபுணர்கள்.

