பறவை மோதியதால் தரையிறங்கிய விமானம்: இன்ஜின் செயல் இழந்தது
திருவனந்தபுரம்: விமானம் மீது பறவை மோதியதால் அதன் இன்ஜின் பழுதடைந்ததை அடுத்து, உடனடியாக அருகிலுள்ள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. கோழிக்கோட்டிலிருந்து 135 பயணிகளுடன் டெல்லிக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தின் மீது பறவை மோதியது. இதையடுத்து அந்த விமானம் கண்ணூர் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் தங்கு விடுதி களில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் டெல்லியில் இருந்து ஏழு பொறியாளர்கள் கண்ணூர் வந்தடைந்து, பறவை மோதிய தால் செயலிழந்த இயந்திரங்களை ஆய்வு செய்து வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை
புதுடெல்லி: யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து, கரையோரப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வட இந்திய மாநிலங் களில் கடந்த சில தினங்களாக கனமழை நீடித்து வருவதை அடுத்து நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில் டெல்லி யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றின் நீர்மட்டம் அபாய அளவான 205.33 மீட்டரை தாண்டி உள்ளது. இதனால் கரையோரப் பகுதிகளில் வசிப்போர் அப்புறப்படுத்தப் படுகின்றனர்.
முதல்வர் பதவி போட்டி: ராஜஸ்தானில் 82 எம்எல்ஏக்கள் போர்க்கொடி
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதை அடுத்து அம் மாநிலத்திற்கு புதிய முதல்வர் நியமிக்கப்பட உள்ளார். தற்போது துணை முதல்வராக உள்ள சச்சின் பைலட்டை முதல்வராக்க ராகுல் காந்தி விரும்புவதாகக் கூறப்படும் நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அசோக் கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் 82 பேர் சட்டப்பேரவை சபாநாயகரிடம் தங்களது பதவி வில கல் கடிதத்தை அளித்துள்ளனர். இதனால் கோபமடைந்த, டெல்லியில் இருந்து வந்த கட்சி மேற்பார்வையாளர்கள் 82 எம்எல்ஏக்களும் கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாக சாடினர். எம்எல்ஏக்கள் பதவி விலகியதற்கும் தமக்கும் எவ்விதத் தொடர் பும் இல்லையென முதல்வர் அசோக் கெலாட் கூறியுள்ளார்.
பணவீக்கம் 6% ஆக இருக்கும்
புதுடெல்லி: நாட்டின் பணவீக்கம் தொடர்ந்து ஆறு விழுக் காட்டுக்கும் அதிகமாகப் பதிவாகும் என 'எஸ் அண்டு பி., குளோபல் ரேட்டிங்ஸ்' நிதி ஆய்வு நிறுவனம் கணித்துள்ளது. எதிர்வரும் நாள்களில் ரூபாய் மதிப்பு ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் என்றும் அதன் கணிப்பு கூறுகிறது.

