பெங்களூரு: கர்நாடகாவில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற பேரணியின்போது காவல்துறையினருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து, நூற்றுக்கணக்கான விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, விவசாய உபரகணங்கள் மீதான ஜிஎஸ்டியை நீக்குதல், அனைத்து வகைப் பயிர்களுக்கும் காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று முன்தினம் நடைபெற்ற இந்தப் பேரணியில் தமிழகம், பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள் திரளாகப் பங்கேற்றனர்.
இதையடுத்து கர்நாடக மாநில தலைமைச் செயலகம் நோக்கி விவசாயிகள் பேரணியாகச் சென்றபோது காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். பேரணி நடத்துவதைக் கைவிட காவல்துறை வலியுறுத்தியதை விவசாயிகள் ஏற்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சிறிது நேரத்தில் வாக்குவாதம் முற்றியதை அடுத்து, இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, பேரணியில் பங்கேற்ற விவசாயிகள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
முன்னதாக, அதிபர் திரௌபதி முர்மு பெங்களூருக்கு வரும்போது அவருக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக இந்தப் பேரணி நடத்தப்படுகிறது என்று வெளியான தகவலை விவசாய சங்க நிர்வாகிகள் திட்டவட்டமாக மறுத்தனர்.

