புதுடெல்லி: 'பிஎஃப்ஐ' எனப்படும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப்் இந்தியா அமைப்பு இந்தியாவில் செயல்பட ஐந்து ஆண்டுக் காலம் தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சு உத்தரவிட்டுள்ளது.
இந்தத் தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும், பிஎஃப்ஐயின் துணை அமைப்புகளுக்கும் இது பொருந்தும் என்றும் இந்திய அரசு கூறியது.
பிஎஃப்ஐயும் அதன் துணை அமைப்புகளும் சட்டவிரோதமானவை என்று உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
முன்னதாக, பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவதற்கும், மதத்தின் அடிப்படையில் பகைமையை வளர்ப்பதற்கும் பயிற்சி முகாம்களை நடத்தியதாக பிஎஃப்ஐக்கு எதிரான வழக்கு தொடர்பாக தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம் உள்பட நாடு முழுவதும், இம்மாதம் 22ஆம் தேதி தேசியப் புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர். நேற்று முன் தினம் இரண்டாவது முறையாக சோதனை நடத்தப்பட்டது.
கிட்டத்தட்ட 93 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பும் அமலாக்கத்துறையும் இணைந்து சோதனை நடத்தின. இந்தச் சோதனைகளின்போது பல்வேறு சர்ச்சைக்குரிய ஆவணங்கள், பணம், மின்னிலக்கக் கருவிகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. மேலும் பிஎஃப்ஐ அமைப்பைச் சேர்ந்த 247 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், பிஎஃப்ஐ அமைப்பின் இணையத்தளத்தையும் மத்திய அரசு முடக்கியுள்ளது.
பிஎஃப்ஐயின் டுவிட்டர், யூடியூப், இன்ஸ்டகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளக் கணக்குகளையும் முடக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பிஎஃப்ஐ அமைப்பின் மாணவர் பிரிவான 'கேம்பஸ் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா'வின் தலைவர் திரு இம்ரான், இது அரசியல்ரீதியான பழிவாங்கும் நடவடிக்கை என்று கூறியதுடன், இந்த ஐந்தாண்டுத் தடை எனும் சவாலைச் சமாளித்து அதன் முடிவில் புதிய சித்தாந்தத்துடன் மீண்டுவருவோம் என்று கூறினார்.
பயங்கரவாத நடவடிக்கைகளில் பிஎஃப்ஐ ஈடுபடவில்லை என்று மறுத்த இம்ரான், தடையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பது பற்றியும் பரிசீலிக்கப்படும் என்றார். ஆனால், பயங்கரவாதம், அதற்கு நிதியுதவி செய்தல், மோசமான தாக்குதல்கள், அரசமைப்புச் சட்டத்தை அவமதித்தல் போன்ற சட்டவிரோதச் செயல்களில் பிஎஃப் ஐயும் அதன் துணை அமைப்புகளும் ஈடுபடுவதாக மத்திய அரசு குற்றம்சாட்டுகிறது.
சோதனையில் கைப்பற்றப்பட்ட பொருள்களில், எளிதில் கிடைக்கும் பொருள்களைப் பயன்படுத்தி வெடிகுண்டு தயாரிப்பதற்கான வழிகாட்டிக் கையேடுகள் இருப்பதாகப் புலனாய்வுத் துறை கூறியது.
உடனடியாகத் தடை விதிக்கப்படாவிட்டால், பிஎஃப்ஐ அமைப்பு தனது நாசவேலை நடவடிக்கைகளைத் தொடரும்; பொது ஒழுங்கைச் சீர்குலைக்கும் என்று கூறிய மத்திய அரசு, உ.பி., கர்நாடகா, குஜராத் மாநில அரசுகள் இவ்வாறு தடைசெய்யப் பரிந்துரைத்ததாகவும் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே கேரளாவில் ஆளும் சிபிஐ(எம்) கட்சியினர், பீகாரின் முன்னாள் முதல்வர் லல்லு பிரசாத் யாதவ் போன்றோர் 'ஆர் எஸ்எஸ்' அமைப்பையும் இதேபோல் தடைசெய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.