புதுடெல்லி: இந்தியாவில் பெண்களின் திருமண வயதை 18லிருந்து 21க்கு உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. இதற்கு ஆதரவாகவும் எதிர்த்தும் பலதரப்பினர் குரல் எழுப்பினர்.
ஆனால், மேற்குவங்கம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் பெரும்பாலான பெண்கள் 21 வயது நிறைவடையும் முன்னரே திருமணம் செய்துகொள்வதாகத் தெரிய வந்துள்ளது.
மேற்கு வங்கத்தில் சராசரியாக 50.2 விழுக்காட்டுப் பெண்கள் 21 வயதிற்குள் திருமண பந்தத்தில் காலடி எடுத்துவைக்கின்றனர்.
ஜார்க்கண்டில் இந்த விகிதம் 48.8 விழுக்காடு.
தலைநகர் புதுடெல்லியைப் பொறுத்தவரை 21 வயதிற்குள் திருமணம் செய்துகொள்ளும் பெண்களின் விகிதம் 15.5 விழுக்காடாக உள்ளது.
நாடு முழுவதும் ஏறக்குறைய 30 விழுக்காட்டுப் பெண்கள் 21 வயது நிரம்புவதற்கு முன்பே திருமணம் செய்து கொண்டுள்ளனர் என்று மத்திய அரசின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
ஜம்மு-காஷ்மீரில் திருமணத்தின் அதிகபட்ச சராசரி வயது 26 ஆக உள்ளது. அங்கு 8.2 விழுக்காட்டுப் பெண்கள் மட்டுமே 21 வயதிற்குள் திருமணம் செய்கின்றனர்.
பஞ்சாப், டெல்லி ஆகிய வட்டாரங்களில் திருமணம் செய்வோரின் அதிகபட்ச சராசரி வயது 24.4 ஆகப் பதிவாகியுள்ளது.
மேற்குவங்கம், ஜார்க்கண்ட் ஆகியவற்றில் இது 21 ஆகவும் ஒடிசாவில் 22 ஆகவும் பதிவாகியுள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டில் கேரளாவில் 18 வயதுக்குட்பட்ட திருமணம் எதுவும் இல்லை.
கேரளா, பீகார் ஆகிய மாநிலங்களில் 21 அல்லது அதற்கு மேற்பட்ட வயதில் திருமணம் செய்வோரின் விகிதம் 72.6 விழுக்காடு.
மொத்தத்தில் நாடு முழுவதும் 70.5 விழுக்காட்டுப் பெண்களுக்கு 21 வயதிற்குமேல் திருமணம் நடப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.
இதில் ஜம்மு-காஷ்மீர் 90.7 விழுக்காட்டுடன் முதலிடத்தில் உள்ளது. குஜராத்தில் 85.2 விழுக்காடும் உத்தராகாண்டில் 84 விழுக்காடும் பதிவான நிலையில், பஞ்சாப், மகாராஷ்டிரா ஆகியவை அடுத்தடுத்த நிலையில் உள்ளன.
கிராமப்புறப் பெண்களில் 3ல் ஒரு பகுதியினர் 18 முதல் 20 வயதிற்குள் திருமணம் செய்து கொண்டுள்ளனர். நகர்ப்புறங்களில் இந்த விகிதம் 18.6 விழுக்காடு.
பெண்கள் 18 வயதிற்கு முன்பே திருமணம்் செய்யும் வழக்கம் முறையே ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், ஒடிசா, பீகார் , உத்தரப் பிரதேசம் ஆகியவற்றில் அதிகம் காணப்படுகிறது.

