பிரம்மபுத்திரா ஆற்றில் படகு கவிழ்ந்தது
கௌஹாத்தி: அசாம் மாநிலம் துப்ரி மாவட்டத்தில் பிரம்மபுத்திரா ஆற்றில் படகு ஒன்று கவிழ்ந்ததில் ஏழு பேரைக் காணவில்லை. படகில் பள்ளி மாணவர்கள், துப்ரி வட்ட அதிகாரி உள்ளிட்ட 30 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர். அடபாரி என்ற இடத்தில் படகு பாலத்தின் மீது மோதி கவிழ்ந்ததாகக் கூறப்பட்டது. மீட்புக்குழுவினர் இதுவரை 15 பேரைக் காப்பாற்றியுள்ளனர். தேடல், மீட்புப் பணி தொடர்கிறது.
மைசூரில் ஹெலிகாப்டர் சுற்றுலா
மைசூரு: கர்நாடக மாநிலம் மைசூரில் ஈராண்டுக்குப் பிறகு தசரா பண்டிகை கோலாகலமாக நடைபெற்றுவருகிறது. இதன் ஓர் அங்கமாக, மைசூர் நகரை ஹெலிகாப்டரில் சுற்றிப் பார்க்கும் 'ஹெலிரைட்' திட்டமும் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ எட்டு நிமிடங்களுக்கு ஹெலிகாப்டரில் மைசூரை சுற்றிப் பார்க்கக் கட்டணம்
3,999 ரூபாய். அடுத்த மாதம் 5ஆம் தேதி வரை இந்தச் சேவை வழங்கப்படும்.
முப்படைத் தலைமைத் தளபதி நியமனம்
புதுடெல்லி: நாட்டின் புதிய முப்படைத் தலைமைத் தளபதியாக ஓய்வுபெற்ற லெஃப்டினெண்ட் ஜெனரல் அனில் சௌகான் (படம்), 61, நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பதவியை வகிக்கும் இரண்டாவது அதிகாரி என்ற சிறப்பு இவரைச் சாரும். இவர், தமது பணிக்காலத்தில், சிறப்பான ராணுவச் சேவைக்காக 'பரம் வசிஷ்ட் சேவா', 'உத்தம் யுத் சேவா' உள்ளிட்ட பல்வேறு பதக்கங்களைப் பெற்றவர்.

