2021ல் நிகழ்ந்த 1,550 விபத்துகளில் 1,807 பேர் பலி; உத்தரப் பிரதேசத்தில் ஆக அதிகம்
புதுடெல்லி: இந்தியாவில் ரயில் தண்டவாளங்களைக் கடந்து செல்லும்போது நாள் ஒன்றுக்குச் சராசரியாக ஐந்து பேர் ரயில்களில் அடிபட்டு மரணமடைகிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.
சென்ற ஆண்டில் இத்தகைய 1,550 விபத்துகள் நிகழ்ந்ததாகவும் அவற்றில் குறைந்தபட்சம் 1,807 பேர் கொல்லப்பட்டுவிட்டதாகவும் அரசாங்க புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்து இருப்பதாக சிஎன்என்-நியூஸ்18 தெரிவித்து உள்ளது.
உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்காளம், பீகார், ஹரியானா, ஜார்க்கண்ட், கேரளா ஆகிய மாநிலங்களில் மொத்தம் 97 விழுக்காட்டு விபத்துகள் நிகழ்ந்து இருக்கின்றன.
எஞ்சிய இடங்களில் நிகழ்ந்த அத்தகைய 54 விபத்துகளில் 55 பேர் மாண்டனர்.
உத்தரப் பிரதேசத்தில் மட்டும் 575 விபத்துகள் நிகழ்ந்ததாகவும் மொத்தம் 875 பேர் கொல்லப்பட்டதாகவும் தெரியவருகிறது.
அத்தகைய விபத்துகள் அதிகமாக நிகழும் மாநிலங்களில் இரண்டாவது இடத்தில் மத்தியப் பிரதேசம் இருக்கிறது.
ரயில் தண்டவாளத்தைக் கடக்கும்போது வேகமாக ரயில் வருவதைக் கவனிக்காமல் பொதுமக்கள் அலட்சியமாக செயல்படுவதே இத்தகைய விபத்துக்கான பொதுவான காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது. தடுப்பு இல்லாத கடப்புகளில் இத்தகைய விபத்துகள் அதிகமாக நிகழ்கின்றன.

