காற்று மாசு: 15 அம்சத் திட்டம்
புதுடெல்லி: குளிர்காலம் நெருக்குவதால் தலைநகர் புதுடெல்லியில் காற்றுத் தூய்மைக்கேடு அதிகரிக்கும். அதைக் குறைக்க டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் 15 அம்சத் திட்டத்தை வெளியிட்டுள்ளார்.
விவசாயிகளுக்கு குப்பைகளை அழுகிப்போகச் செய்யும் இலவச மருந்து; அக்டோபர் 6ஆம் தேதி முதல் தூய்மைக் கேடு எதிர்ப்பு இயக்கம்; வாகனங்களைச் சோதிக்க 380 குழுக்கள் முதலானவை அவற்றில் அடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
5ஜி சேவை இன்று தொடக்கம்
புதுடெல்லி: இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று புதுடெல்லியில் அதிவேக 5ஜி தொழில்நுட்பத்தை தொடங்கி வைக்கிறார்.
5ஜி சேவையைப் பொறுத்தவரை ஏலம் அனைத்தும் முடிந்து பெரும்பாலான அலைவரிசைகளை ஜியோ நிறுவனம் வாங்கி இருக்கிறது. நாட்டில் 5ஜி சேவை வழங்குவதில் ஏர்டெல் இரண்டாவது இடத்தில் உள்ளது.
கர்நாடகாவில் ராகுல் நடக்கிறார்
பெங்களூர்: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாரத ஒற்றுமையை வலியுறுத்தி கடந்த மாதம் 7ஆம் தேதி தமிழ்நாடு கன்னியாகுமரியில் பாதயாத்திரை தொடங்கினார். பின்னர் சென்ற மாதம் 11ஆம் தேதி கேரளாவில் நடைப் பயணம் மேற்கொண்ட அவர், கர்நாடகாவில் தனது பயணத்தைத் தொடங்கி இருக்கிறார்.
அம்பானிக்கு கூடுதல் பாதுகாப்பு
புதுடெல்லி: உலக பணக்காரர்கள் பட்டியலில் 10வது இடத்தில் இருக்கும் பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானிக்குப் பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டு 'இசட் பிளஸ்' பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மும்பையில் வசித்து வரும் ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானிக்கு 'இசட்' பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது.
67 இணையத்தளங்கள் முடக்கம்
புதுடெல்லி: இந்தியாவில் சென்ற ஆண்டில் நடப்புக்கு வந்த புதிய தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின்படி இணைய விதிமுறை மீறல்களில் ஈடுபடும் தளங்களை மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து முடக்கி வருகிறது.
இதனையொட்டி, புனே நீதிமன்றம் வழிகாட்டுதல்படி 63 இணையத்தளங்களையும் உத்தராகண்ட் உயர் நீதிமன்றம் வழிகாட்டுதல்படி நான்கு ஆபாச இணையத்தளங்களையும் மத்திய அரசு இப்போது முடக்கிவிட்டது. அந்த இணையத்தளங்கள் பெண்களின் கண்ணியத்திற்குக் களங்கம் ஏற்படுத்தும் விதமாகவும் ஆபாசத்தை பரப்பும் விதமாகவும் செயல்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது.
மணிப்பூரில் நிலநடுக்கம்
இம்பால்: மணிப்பூரில் தெங்னூமால் என்ற இடத்தில் 5.2 ரிக்டர் அளவுக்கு நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. மணிப்பூரில் ஏற்பட்ட நிலநடுக்கம் வடகிழக்கு மாநிலங்களான அசாம், மிசோரம், திரிபுரா, மேகாலயாவிலும் உணரப்பட்டதாக நேற்று தகவல்கள் தெரிவித்தன.
இணைய நாணய தேநீர்க் கடை
பெங்களூர்: கர்நாடகாவில் பெங்களூரு மாரத்தஹள்ளியில் தேநீர்க்கடை நடத்தி வரும் சுபம் சாய்னா என்பவர், தன் கடைக்குத் தேநீர் குடிக்க வரும் வாடிக்கையாளர்களிடம் பணம், சில்லறை நாணயம் வாங்குவதற்குப் பதிலாக இணைய நாணயம் (கிரிப்டோகரன்சி) பெற்றுவருகிறார். அதைக் காட்டும் படம் அக்சய் என்பவரின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
ஆபாசப் படம் காட்டிய ஆசிரியருக்கு நேர்ந்த கதி
ராஞ்சி: உத்தரகண்ட் மாநிலம், மேற்கு சிங்பம் மாவட்டம், நவ்முண்டி என்ற கிராமத்தில் செயல்படும் நடுநிலைப் பள்ளியில் வேலை பார்க்கும் ஓர் ஆசிரியர் கைப்பேசியில் மாணவிகளுக்கு ஆபாசப் படங்களை அனுப்பி தொல்லை கொடுத்துவந்தார்.
அவருக்கு எதிராக ஆறு மாணவிகள் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாததை அடுத்து, கிராம மக்களே ஆசிரியரைப் பிடித்து அடித்து உதைத்து முகத்தில் கறுப்பு மை பூசி, காலணி மாலை அணிவித்து ஆசிரியரை ஊர் முழுவதும் கொண்டு சென்று அவமானப்படுத்தினர்.
காவல்துறையினர் ஆசிரியரை மீட்டு சிறையில் அடைத்து விசாரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆசிரியரின் பெயர் விவரம் தெரியவில்லை.

