புதுடெல்லி: இந்தியாவின் மத்திய புலன்விசாரணைத் துறை நாடு முழுவதும் மேற்கொண்ட சோதனைகளில் அதிக அளவில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது; 175 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களுக்கு எதிராக மொத்தம் 127 புகார்கள் தாக்கல் செய்யப்பட்டு இருக்கின்றன.
இந்தியப் பெருங்கடல் பகுதிகளையொட்டிய எட்டு மாநிலங்களில் அந்தத் துறை அதிகாரிகள் போதைப்பொருளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தனர்.
போதைப்பொருள் கட்டுப்பாட்டு இலாகா அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளும் ஒத்துழைத்தனர்.
வழிவழியான ஹெராயின், கஞ்சா போன்ற போதைப்பொருளுடன் எக்ஸ்டசி போன்ற மாத்திரைகளும் வேதிப் பொருள்களும் பெரிய அளவில் கைப்பற்றப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மொத்தம் 5.1 கிலோ ஹெராயின், 33.9 கிலோ கஞ்சா, 11,000க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான போதை மாத்திரைகள் முதலானவை அவற்றில் அடங்கும். சந்தேகப்பேர்வழிகள் 6,600 பேர் விசாரிக்கப்பட்டதாக புலன்விசாரணைத் துறைப் பேச்சாளர் ஆர் சி ஜோஷி கூறினார்.
போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான உலகளாவிய நடவடிக்கை களையொட்டி அதிகாரிகள் பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, டெல்லி, மணிப்பூரில் சோதனைகளை மேற்கொண்டனர்.
'கருடா' என்ற அந்தச் சோதனை தமிழ்நாட்டிலும் மேற்கொள்ளப்பட்டதாக திரு ஜோஷி கூறினார்.
இந்தியா முழுவதும் ரகசியமாகச் செயல்படும் போதைப்பொருள் கட்டமைப்புகளை முடக்கி அவற்றைச் செயல்படாமல் செய்வதே அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையின் நோக்கமாக இருந்தது.

