பாட்னா: பீகாரில் மகாவீர் ஆரோக்கிய சன்ஸ்தான் என்ற மருத்துவமனையில் காது சிகிச்சைக்காக சென்ற இளம்பெண், தாதி ஒருவரின் அலட்சியத்தால் கையை இழக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டது.
ரேகா என்ற இந்தப் பெண், ஜூலை மாதம் 11ஆம் தேதி காது அறுவை சிகிச்சைக்குச் சென்றதாகவும் ஆனால் ஒரு தாதி அவருக்கு நரம்புக்குப் பதிலாக சுத்த ரத்தம் ஓடும் குழாயில் ஊசி மருந்தை ஏற்றிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் ரேகாவின் கை கொஞ்சம் கொஞ்சமாக பச்சை நிறத்தில் மாறியதை அடுத்து, அது பற்றி மருத்துவரிடம் கூறியதாகவும் ஆனால், மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
கடைசியில் இவர் இடதுகையை இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. இதனால் அடுத்த மாதம் சிறப்பாக நடக்கவிருந்த ரேகாவின் திருமணமும் நிறுத்தப்பட்டது.
காவல்துறையை அணுகி புகார் கொடுக்கச் சென்றபோது அதிகாரிகள் அலட்சியமாக இருந்ததை அடுத்து ரேகாவின் குடும்பத்தினர் நீதிமன்றத்தை நாடி உள்ளதாக ஊடகங்கள் கூறின.

