ஹைதராபாத்தில் மூன்று பயங்கரவாதிகள் கைது

2 mins read
7817cf97-2491-448a-b42f-2be6b95182c7
-

குண்டு வீசி தாக்குதல் நடத்த சதி

ஹைதராபாத்: பயங்கரவாதத் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த மூன்று பேரை ஹைதராபாத் காவல்துறை கைது செய்துள்ளது. மூவருக்கும் பாகிஸ்தான் ஐஎஸ்ஐ, லஷ்கர் இ தொய்பா அமைப்புகளுடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

பயங்கரவாதத் தாக்குதலுக்கு சிலர் திட்டமிட்டுள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ஹைதராபாத் காவல்துறையினர் கடந்த சில தினங்களாக தீவிர சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.

மலக்பேட்டை பகுதியைச் சேர்ந்த அப்துல் ஜாகித் (39 வயது) என்பவர்தான் இத்தாக்குதலுக்கான திட்டத்தைச் செயல்படுத்த உள்ளதாகத் தெரியவந்தது. இவர் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ. உளவு அமைப்புடனான தனது தொடர்பை அண்மையில் புதுப்பித்து இருப்பதாகவும் அந்த அமைப்பின் அறிவுறுத்தலின்பேரில் நகரில் பயங்கரவாதத் தாக்குதலுக்கு திட்டமிட்டு இருப்பதாகவும் மத்திய உளவுத்துறை ஹைதராபாத் காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து தேடுதல் வேட்டை தீவிரமடைந்தது. அதன் முடிவில் அப்துல் ஜாகித்தை வளைத்துப் பிடித்து கைது செய்த ஹைதராபாத் காவல்துறையினரிடம், அவரது கூட்டாளிகளான 39 வயது முகமது சமீருத்தின், 29 வயதான ஹுமாயூன் நகரை சேர்ந்த மாஸ் ஹசன் பரூக் ஆகிய இருவரும் வசமாக சிக்கினர்.

அவர்களிடம் இருந்த நான்கு கையெறி குண்டுகள், 5.41 லட்சம் ரொக்கப்பணம், ஐந்து கைப்பேசிகள், இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வெடிகுண்டுகளைக் கொண்டுதான் ஹைதராபாத்தில் தாக்குதல் நடத்த மூவரும் திட்டமிட்டிருந்தனர்.

இந்தக் குண்டுகள் ஐஎஸ்ஐ, லஷ்கர் இ தொய்பா அமைப்பினரிடம் இருந்து பெறப்பட்டவை என விசாரணையில் தெரியவந்துள்ளது என்றும் கைதான மூவரில் அப்துல் ஜாகித் ஏற்கெனவே ஹைதராபாத்தில் பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டவர் என்றும் தெரியவந்துள்ளது.

மேலும், ஹைதராபாத்தில் இருந்தபடி தென் மாநிலங்களைச் சேர்ந்த இளையர்களை மூளைச் சலவை செய்து பயங்கரவாத அமைப்பில் அவர் சேர வைத்துள்ளார்.

இதற்கிடையே, தேசிய பாதுகாப்பு ஆலோசகர், தேசிய பாதுகாப்பு மன்றச் செயலகம் அளிக்கும் உளவுத் தகவல்களை மத்திய அமைச்சர்கள், அனைத்துத் துறைச் செயலாளர்கள் புறக்கணிக்கக் கூடாது எனப் பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்.

பாதுகாப்பு மன்றச் செயலகம் அளிக்கும் உளவுத் தகவல்களை தீவிரமாகக் கருத வேண்டும் என்றும் அவற்றின் பின்னணிக்கு ஏற்ப உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.