பெங்களூரு: ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள ஒற்றுமை நடைப்பயணத்தில் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவரான சோனியா காந்தி பங்கேற்க உள்ளார்.
அவர் வரும் ஆறாம் தேதியன்று பயணத்தில் இணைய வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்தும் விதமாக குமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமை நடைப்பயணத்தை மேற்கொண்டுள்ளார் ராகுல் காந்தி.
கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து நடைப்பயணத்தைத் துவங்கிய அவர், பின்னர் கேரளாவுக்குச் சென்றார்.
தற்போது கர்நாடகா வந்தடைந்துள்ள அவர், 21 நாள்கள் அம்மாநிலத்தில் பயணம் மேற்கொண்டு, 511 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று பொதுமக்களைச் சந்திக்க உள்ளார்.
நாட்டில் ஜனநாயகத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றும் மக்களைச் சந்தித்து நாடு தற்போதுள்ள நிலையை விளக்குவதற்கு நடைப்பயணம் ஒன்றே சிறந்த வழி என்றும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
இந்நிலையில், ராகுல் மேற்கொண்டுள்ள நடைப்பயணத்தில் அவரது தாயாரும் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவருமான சோனியா காந்தி இணைந்துள்ளார்.

