புதுடெல்லி: பிரிட்டன், கனடா போன்ற வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் புற்றுநோய் காரணமாக மரணமடையும் சிறார்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.
தாமதமாக நோயைக் கண்டறிவது; போதுமான சிகிச்சை இல்லாதது; தேர்ச்சியுள்ள ஊழியர் பற்றாக்குறை; படுக்கைகள் இல்லாத நிலை; சாதனங்கள் இல்லாத நிலவரம் ஆகியவை இதற்கான காரணம் என்று பரந்த அளவில் முதன்முதலாக நடத்தப்பட்ட ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.
இந்திய மருத்துவ ஆய்வு மன்றத்தின்கீழ் செயல்படும் தேசிய நோய்த் தகவல் ஆய்வு நிலையம் அந்த அறிக்கையை உலக சுகாதார நிறுவனத்துடன் சேர்ந்து வெளியிட்டு உள்ளது.
இந்தியாவில் புற்றுநோய் காரணமாக மரணமடைவோரில், 14 வரை வயதுள்ள சிறார்களின் எண்ணிக்கை 4% ஆக இருக்கிறது என்று அறிக்கை தெரிவிக்கிறது.
அறிக்கை 26 மாநிலங்களையும் நான்கு யூனியன் பிரதேசங்களையும் உள்ளடக்கி தயாரிக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.