'குற்றம், பயங்கரவாதம்' ஆகியவை காரணமாக இந்தியாவுக்குச் செல்லும்போது கூடுதல் கவனத்துடன் இருக்கும்படி அமெரிக்கா அதன் குடிமக்களுக்கு பயண ஆலோசனை விடுத்திருக்கிறது.
மேலும், ஜம்மு, காஷ்மீர் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சு நேற்று அறிவுறுத்தியது.
ஜம்மு காஷ்மீருக்கு கடந்த 75 ஆண்டுகளில் ஆக அதிகமாக இவ்வாண்டு 16.2 மில்லியன் சுற்றுப்பயணிகள் சென்றனர் என்ற தெரிவிக்கப்பட்ட நிலையில் அமெரிக்காவின் பயண ஆலோசனை வெளியிடப்பட்டது.
இந்தியாவுக்கான பயண ஆலோசனை அளவை இரண்டு என்ற நிலைக்கு அமெரிக்கா உயர்த்தியது. ஒன்று முதல் நான்கு வரையுள்ள அளவுகோலில் ஒன்று வழக்கமான கவனத்துடன் இருக்கும்படி அறிவுறுத்துகிறது.
நான்காம் நிலையில் பயணம் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
பயங்கரவாதம், பொதுமக்களிடையே குழப்பம் ஆகியவை நிலவுவதால் (கிழக்கில் உள்ள லடாக், அதன் தலைநகரம் லே ஆகியவை தவிர) ஜம்மு காஷ்மீர் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்று கூறப்பட்டது.
இந்தியா-பாகிஸ்தான் எல்லையைச் சுற்றிய 10 கிலோமீட்டர் பகுதிக்குள் ஆயுதச் சண்டை நடக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் பயண ஆலோசனை கூறியது.
இந்தியாவில் வேகமாக அதிகரித்துவரும் குற்றங்களில் பாலியல் வன்கொடுமை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகப் பயண ஆலோசனையில் கூறப்பட்டது.
பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்கள் சுற்றுப்பயணத் தளங்களிலும் மற்ற இடங்களிலும் நடந்துள்ளதாக ஆலோசனை அறிக்கை கூறியது.
சுற்றுப்பயணத் தளங்கள், போக்குவரத்து மையங்கள், சந்தைகள், கடைத்தொகுதிகள் உள்ளிட்ட இடங்களை பயங்கரவாதிகள் திடீரென்று தாக்கலாம் என்று அறிக்கை சொன்னது.
சில நாள்களுக்கு முன்னர்தான் பாகிஸ்தானுக்குப் பயணம் செய்வதை மறுபரிநீலிக்கும்படி அமெரிக்க வெளியுறவு அமைச்சு பயண ஆலோசனை விடுத்தது.