கொச்சி: நாட்டில் ஆக அதிகமாக ஒரே சமயத்தில் கேரளா, குஜராத் ஆகிய இரு மாநிலங்களிலும் படகில் கடத்தி வரப்பட்ட ரூ.1,550 கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஒரு சம்பவத்தில் ஆப்கானிஸ் தானில் இருந்து கேரளாவுக்கு கடத்தி வரப்பட்ட ரூ.1,200 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பிடிபட்டது.
மற்றொரு சம்பவத்தில் குஜராத் கடற்கரைப் பகுதியில் ரூ.350 கோடி மதிப்பிலான போதைப்பொருளுடன் பாகிஸ்தான் படகு பிடிபட்டது.
கேரள மாநிலம், கொச்சி கடற் பகுதியில் படகு மூலம் கடத்தி வரப்பட்ட 200 கிலோ ஹெராயின் பொட்டலங்களை இந்தியக் கடற்படை, போதைப்பொருள் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு 1,200 கோடி ரூபாய் எனத் தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் தயாரிக்கப் பட்ட இந்தப் போதைப்பொருள் ஈரான் நாட்டுப் படகில் ஏற்றப்பட்டு, பாகிஸ்தான் வழியாக இந்தியா, இலங்கை நாடுகளில் விற்பனை செய்வதற்காகக் கொண்டு வரப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தக் கடத்தல் தொடர்பாக ஈரான் நாட்டைச் சேர்ந்த ஆறுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று போதைப்பொருள் கட்டுப்பாட்டுத்துறை மூத்த அதிகாரி சஞ்சய் குமார் சிங் தெரிவித்துள்ளார்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் பொட்டலங்களில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகளின் தனிப்பட்ட முத்திரைகள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கைதான ஆறு பேருடன் போதைப்பொருள் பொட்டலங்கள் கொச்சி காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டன.
இரண்டாவது சம்பவத்தில், குஜராத் கடல் பகுதியில் அனைத்துலக எல்லை அருகே இந்தியக் கடலோரக் காவல்படையினர் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, பாகிஸ்தானின் 'அல் சகார்' என்ற படகைத் தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் 50 கிலோ ஹெராயின் இருந்ததால் படகுடன் சரக்கு பறிமுதல் செய்யப்பட்டது.
போதைப்பொருளைக் கடத்தி வந்த ஆறு பேரைக் கைது செய்து, குஜராத் பயங்கரவாத தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

