கேரளாவில் உள்ள கோவில் ஒன்றில் வாழ்ந்துவந்த 'பாபியா' எனும் சைவ முதலை மடிந்தது. இந்த முதலை கோவிலில் வழங்கப்பட்ட சைவ பிரசாதத்தை மட்டுமே உண்டு உயிர் வாழ்ந்ததால் கேரளாவில் புகழ் பெற்றது. முதலைக்கு 77 வயது எனக் கூறப்பட்டது.
கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் உள்ளது அனந்த பத்மாநாப சுவாமி கோவில். இந்தக் கோவில் குளத்தில் 'பாபியா' வாழ்ந்து வந்தது. முதலைகள் மாமிசம் சாப்பிடும் வகையைச் சேர்ந்தவை. ஆனால், பாபியாவோ சைவ உணவு மட்டுமே சாப்பிட்டது. இதனால் இந்த முதலை தெய்வீகமானது என்று பலரும் நம்பினர். இந்த முதலையைக் காணவே பக்தர்கள் பலர் இந்த கோவிலுக்குத் திரளாக வந்தனர். இதுவரை முதலை யாரையும் தாக்கியதில்லை என்று கூறப்பட்டது.
முதலைக்கு கடந்த சில நாட்களாகவே உடல்நிலை சரியில்லை என்று கோவில் ஊழியர்கள் எண்ணினர். விலங்கு மருத்துவர்கள் அழைக்கப்பட்டு முதலையைத் தேடும்போது, அது மாண்டு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இரவு நேரத்தில் கோவில் மூடப்பட்ட பின், குளத்திலிருந்து கோவிலுக்கு வந்து பாபியா ஓய்வெடுக்கும் என்றும் விடிந்ததும் அது மீண்டும் குளத்துக்குச் சென்றுவிடும் என்று கூறப்பட்டது.
பாபியாவுக்குச் சிறப்பான முறையில் இறுதிச் சடங்கு ஏற்பாடு செய்யப்பட்டு, நல்லடக்கம் செய்யப்பட்டது.

