10 நாள்களில் 17 பயங்கரவாதிகளைக் கைதுசெய்த பஞ்சாப் காவல்துறை
சண்டிகர்: கடந்த பத்து நாள்களில் மட்டும் பஞ்சாப்பில் 17 பயங்கரவாதிகள் கைதுசெய்யப்பட்டிருப்பதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. இவர்கள் ஐந்து பயங்கரவாத கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பதும் கனடா, பாகிஸ்தானில் இயங்கும் அமைப்புகளின் ஆதரவுடன் செயல்பட்டு வந்ததும் தற்போது தெரியவந்துள்ளது. இதற்கிடையே, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பஞ்சாப்பில் 314 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஸ்வப்னா: சிவசங்கர் என்னை திருமணம் செய்துகொண்டார்
திருவனந்தபுரம்: கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய தங்கக்கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள ஸ்வப்னா சுரேஷ், அம்மாநிலத்தின் முதன்மைச் செயலாளராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கருக்கும் தமக்கும் திருமணமாகிவிட்டதாக தெரிவித்துள்ளார். தனது சுயசரிதைப் புத்தகத்தில் ஸ்வப்னா இத்தகவலைக் குறிப்பிட்டுள்ளார். சென்னையில் உள்ள கோவிலில் வைத்து சிவசங்கர் தமக்குத் தாலி கட்டியதாக தெரிவித்துள்ள ஸ்வப்னா, கேரள முன்னாள் அமைச்சர் ஒருவர் தம்மைப் பலமுறை உல்லாசத்திற்கு அழைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். அந்த அமைச்சர் தமக்கு 'வாட்ஸ்அப்' மூலம் அனுப்பிய தகவல்கள் தம்மிடம் இன்னும் இருப்பதாகவும் ஸ்வப்னா கூறியுள்ளார்.
துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்தும் பயங்கரவாதிகளுடன் போராடிய நாய்
ஸ்ரீநகர்: பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில், படுகாயம் அடைந்த நிலையிலும் அவர்களை பாதுகாப்புப் படையினரிடம் பிடித்துக் கொடுக்கும் வரை போராடிய நாய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஜூம் என்று அழைக்கப்படும் அந்த நாய் நலம் பெற பிரார்த்தனை செய்து வருவதாக சமூக ஊடகங்களில் பலர் பதிவிட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த வீட்டை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்தனர். அப்போது, ராணுவத்தில் பயிற்சி பெற்ற ஜூம் அந்த வீட்டுக்குள் நுழைந்தது. அங்கிருந்த இரண்டு பயங்கரவாதிகள் சுட்டதில் அதன்மீது குண்டுகள் பாய்ந்தன. எனினும், பயங்கரவாதிகளை ஆவேசமாகத் தாக்கியது. பின்னர் பயங்கரவாதிகள் கொல்லப் பட்ட நிலையில், ஜூம் நாய்க்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்திய குடிமக்களுக்கு அறிவுறுத்து
புதுடெல்லி: உக்ரேனில் உள்ள இந்தியர்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள் ளது. இது தொடர்பாக இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரேனில் போர் தீவிரம் அடைந்திருப்பதால், இந்திய குடிமக்கள் அந்நாட்டுக்குள் தேவையற்ற பயணங் களைத் தவிர்க்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

