மும்பை: சுவிட்சர்லாந்து வங்கிகளில் கணக்கு வைத்துள்ள இந்தியர்கள் பற்றிய விவரங்களை அந்நாட்டு அரசு இந்தியாவிடம் ஒப்படைத்துள் ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் நான்காவது முறையாக இந்த விவரங்கள் இந்திய அரசிடம் அளிக்கப்பட்டுள்ளன.
சுவிட்சர்லாந்து வங்கிகளில் இந்திய குடிமக்கள் ஏராளமானோர் ரகசியக் கணக்குகள் தொடங்கி பல்லாயிரம் கோடி ரூபாய் கறுப்புப்பணத்தைப் பதுக்கி வைத்திருப்பதாக நீண்ட காலமாகக் கூறப்பட்டு வருகிறது.
இதையடுத்து, கறுப்புப்பணப் புழக்கத்தால் இந்தியாவைப்போல் மேலும் பல நாடுகள் பாதிக்கப்பட்டன. அந்நாடுகள் கொடுத்த அழுத்தம் காரணமாக சுவிட்சர்லாந்து வங்கிகளில் கணக்கு வைத்துள்ள வெளிநாட்டவர்கள் குறித்த விவரங்களை சம்பந்தப்பட்ட நாடுகளிடம் பல்வேறு கட்டங்களாக ஒப்படைக்க சுவிட்சர்லாந்து முன்வந்தது.
அதன்படி, கடந்த 2019ஆம் ஆண்டு முதல், இந்தியர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை அந்நாட்டு அரசு படிப்படியாக இந்தியாவிடம் அளித்து வருகிறது.
தற்போது நான்காவது முறையாக அளிக்கப்பட்டுள்ள கோப்புகளில் பல முக்கியப் புள்ளிகள், முன்னணி நிறுவனங்கள் தொடர்பான விவரங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக தென்கிழக்கு ஆசிய நாடுகளில் குடியேறிய வெளிநாட்டுவாழ் இந்தியர்கள், அரசியல்வாதிகள், முந்தைய அரச குடும்பத்தினர் ஆகியோரின் பெயர்கள் நான்காவது கோப்பில் இடம்பெற்றுள்ளதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
"அவர்களைப் பற்றிய விவரங்களைக் கொண்டு, வருமான வரி ஏய்ப்பு நடந்துள்ளதா என ஆராயப்படும்.
"ஒருவேளை வருமானத்தை மறைத்தது தெரியவந்தால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
"வரி ஏய்ப்புக்கு மட்டுமல்லாமல், சட்டவிரோதப் பணப் பரிமாற்றம், பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தால் நடவடிக்கை பாயும்," எனவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.