திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள கோவில் ஒன்றில் வாழ்ந்துவந்த 'பாபியா' எனும் சைவ முதலை மடிந்தது. அந்த முதலை கோவிலில் வழங்கப்பட்ட சைவ பிரசாதத்தை மட்டுமே உண்டு உயிர் வாழ்ந்ததால் கேரளாவில் புகழ் பெற்றது. முதலைக்கு 75 வயது எனக் கூறப்பட்டது.
கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள அனந்த பத்மாநாப சுவாமி கோவில் குளத்தில் வாழ்ந்து வந்த முதலை மாண்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
'பாபியா' என்று அழைக்கப்பட்ட அந்த முதலை கோவிலில் வழங்கப்பட்ட சைவ பிரசாதத்தை மட்டுமே உண்டு உயிர் வாழ்ந்து வந்தது.
மாமிசம் சாப்பிடும் விலங்கினம் என்றபோதும் பாபியா சைவ உணவு மட்டுமே சாப்பிட்டதால் அதை தெய்வீக முதலை என்று பலரும் கருதினர். இந்த முதலையைக் காண்பதற்காகவே பக்தர்கள் பலர் அந்தக் கோவிலுக்குத் திரளாக வந்தனர். இதுவரை பாபியா முதலை யாரையும் தாக்கியதில்லை என்று கூறப்பட்டது. அண்மைய சில நாள்களாக உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், 75 வயதான அம்முதலை மாண்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் கோவில் மூடப்பட்டபின், குளத்திலிருந்து கோவிலுக்கு வந்து பாபியா ஓய்வெடுக்கும் என்றும் விடிந்ததும் அது மீண்டும் குளத்துக்குச் சென்றுவிடும் என்றும் கூறப்பட்டது.

