ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் பல சிறுவர்களின் மரணங்களுக்கும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்துக்கும் தொடர்பு இருக்கலாம் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தது.
இதனைத் தொடர்ந்து அந்த இருமல் மருந்தின் தயாரிப்பை இந்திய அதிகாரிகள் நிறுத்தியுள்ளனர்.
'மெய்டன் பார்மசியூட்டிக்கல்ஸ்' எனும் நிறுவனத்தின் தொழிற்சாலையைச் சோதனையிட்ட இந்திய அதிகாரிகள் ஆலையில் சில பாதுகாப்பு நடைமுறைகள் மீறப்பட்டதாகக் குறிப்பிட்டனர். இதனைத் தொடர்ந்து இருமல் மருந்தின் தயாரிப்பு நிறுத்தப்பட்டதாக ஹரியானா மாநிலத்தின் சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.
மெய்டன் நிறுவனத்தின் நான்கு வகை இருமல் மருந்துகளில் சில குறிப்பிட்ட ரசாயனப் பொருள்களின் அளவு அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறியது. இதனால் சிறுநீரகம் பாதிக்கப்படும் என்று கூறப்பட்டது,
சிறுநீரகப் பிரச்சினை காரணமாக காம்பியாவில் இதுவரை 66 சிறுவர்கள் மாண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தைக் குடித்ததாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.


