பெங்களூரு: இந்திய ஒற்றுமை நடைப் பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தற்போது கர்நாடகாவில் நடைப் பயணத்தைத் தொடர்கிறார்.
அந்தப் பயணத்தில் அவரைச் சந்தித்த இளம்பெண் ஒருவர் கண்ணீர் சிந்தி புலம்பும் காட்சி வெளியான நிலையில், அது குறித்து ராகுல் காந்தி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் விவரித்துள்ளார்.
இது தொடர்பாக ராகுல் காந்தி தனது ஃபேஸ்புக் பக்கத்தில், "இந்த இளம்பெண் என்னிடம் அழுது புலம்பினார். அதற்கான காரணத்தை நான் உங்களுக்கு விவரிக்கிறேன்.
"நமது நாட்டின் அடிப்படை மதிப்பீடுகள் மீது இந்த இளம்பெண்ணும், அவரது சகோதரரும் பெரும் மதிப்பு கொண்டுள்ளனர்.
"ஆனால், இன்றைக்கு இவர்கள் இருவரும் நாட்டில் உள்ள லட்சக்கணக்கான இளைஞர்களைப் போல் நாட்டின் கனவு தங்களின் கண்முன்னாலேயே சிதைவதைக் கண்டு பெருந்துயரத்தில் வாடுகின்றனர்.
"அவர்கள் அனைவரும் சுதந்திரம், சமத்துவம் ஆகிய கோட்பாடுகளைக் கேட்டே வளர்ந்துள்ளனர்.
"அன்பு, நல்லிணக்கம், சகோதரத்துவம் ஆகியவை புகட்டப்பட்டு வளர்ந்துள்ளனர். ஆனால், இன்று கருத்து மோதல்களால் தங்களின் நண்பர்களை இழந்துவருவதாகவும், எதிர்காலம் மீதான நம்பிக்கை அழிந்து வருவதாகவும் வருத்தம் தெரிவிக்கின்றனர். அதுபோல் நம் நாட்டில் அவர்களுக்கான வாய்ப்புகள் குறைந்து வருவதை நினைத்தும் வருந்துகின்றனர்.
"இந்தியா வெறுப்பால், வன்முறையால், வேலைவாய்ப்பின்மையால், எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு தொலைநோக்குப் பார்வை இல்லாமல் இருப்பதைக் கண்டு மக்கள் வருந்துகின்றனர்," என்று ராகுல் காந்தி தனது சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், கர்நாடகத்தில் இன்னொரு சம்பவத்தில், ராகுல் காந்தி, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், பொதுச்செயலாளர் வேணுகோபால் ஆகியோர் சிறுவன் ஒருவனுடன் புஷ்-அப் போட்டியில் கலந்துகொண்டனர். அந்தக் காணொளியும் சமூக ஊடகங்களில் பரவி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
பாஜக ஆளும் கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று வரும் காங்கிரசின் ஒற்றுமை நடைப்பயணத்தில் தன்னுடன் வருபவர்களையும் அப்போது தன்னைச் சந்திக்க வருபவர்களையும் கலகலப்பாக்க ராகுல் காந்தி மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

