சட்டப் பல்கலைக்கழகத் தேர்வில் பழைய வினாத்தாள்கள்
மும்பை: மும்பை பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சட்ட கல்வித் தேர்வின்போது, மாணவர்களுக்கு வழங்கிய வினாத்தாள்கள் 2021ஆம் ஆண்டுக்கான வினாத்தாள்கள் என்று தெரியவந்தது. உடனடியாக அந்த வினாத்தாள்களை மாணவர்களிடம் திரும்பப்பெற்றனர் தேர்வு மைய அதிகாரிகள். பின்னர், அனைத்து சட்டக் கல்லூரிகளிலும் புதிய வினாத்தாள்களுடன் தேர்வு அதே நாளில் பிற்பகலில் நடத்தப்பட்டது.
கங்குலிக்கு மீண்டும் வாய்ப்பு இல்லை
புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின்(பிசிசிஐ) தலைவர் பதவி மீண்டும் சவுரவ் கங்குலிக்கு அளிக்கப்படாதது தொடர்பாக திரிணாமூல் காங்கிரஸ், பாரதிய ஜனதா ஆகிய கட்சிகளுக்கு இடையே கருத்து மோதல் வலுத்துள்ளது. "கடந்த ஆண்டு மேற்கு வங்கத் தேர்தலின்போது, கங்குலி பாஜக.வில் இணைவார் என்று அக்கட்சி ஒரு செய்தியைப் பரப்பியது. அதற்கு மாறாக கங்குலி பாஜகவில் சேரவில்லை. அதனால், அவர் இப்போது குறிவைக்கப்பட்டுள்ளார்," என்று மேற்கு வங்க ஆளும் கட்சியான திரிணாமூல் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள திரிணாமூல் காங்கிரசின் மாநிலங்களவை எம்.பி., சாந்தனு சென், அரசியல் பழிவாங்கலுக்கு மற்றுமோர் உதாரணம் இது. அமித்ஷாவின் மகனுக்கு வழங்கப்பட்ட இரண்டாவது வாய்ப்பு, கங்குலிக்கு ஏன் வழங்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
காம்பியா மரணம்: இருமல் மருந்துகளின் உற்பத்தி நிறுத்தம்
புதுடெல்லி: ஹரியானா மாநிலத்தில் உள்ள 'மெய்டன் ஃபார்மசூட்டிக்கல்ஸ்' நிறுவனத்தின் 'கோஃபெக்ஸ் மாலின் சிரப்' இருமல் மருந்து உள்ளிட்ட நான்கு மருந்துகளின் உற்பத்திகள் நிறுத்தப்பட்டதாக அந்த மாநிலத்தின் சுகாதார அமைச்சர் அனில் விஜ் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள காம்பியா நாட்டில் நிகழ்ந்த சிறுவர்களின் மரணங்களை இந்த இருமல் மருந்துடன் தொடர்புபடுத்தி உலக சுகாதார நிறுவனம் கடந்த வாரம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதனையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

