புதுடெல்லி: பண மதிப்பிழப்பு குறித்து விசாரிக்கப்படும் என உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு அறிவித்துள்ளது.
பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான வழக்குகள் உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.ஏ.நசீர் தலைமையிலான அரசியல் சாசன அமர்வின் முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கு தொடுத்த மனுதாரர்களில் ஒருவருக்காக முன்னிலையான முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், பண மதிப்பிழப்பு நடவடிக்கையைச் செயல்படுத்த நாடாளுமன்றத்தில் புதிய சட்டம் இயற்றப்பட வேண்டியுள்ளது என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கடந்த 2016ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பண மதிப்பிழப்பு முடிவுகள் பயனற்ற நடவடிக்கையா என்பது குறித்து உச்ச நீதிமன்றம் ஆராய வேண்டியுள்ளது என்றனர்.
"அரசியல் சாசன அமர்வு முன் ஒரு பிரச்சினை எழுப்பப்பட்டால், அதற்குப் பதில் அளிப்பது எங்கள் கடமை. இதற்கு வழக்கறிஞர்கள் கூறுவதை கேட்டு நாங்கள் முடிவு செய்ய வேண்டியுள்ளது," என்றும் நீதிபதிகள் மேலும் தெரிவித்தனர்.
கடந்த 2016ஆம் ஆண்டு மத்திய அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து அறிவித்தது. இதற்கு சில தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும், நாட்டில் உள்ள கறுப்பு பணத்தை ஒழிப்பதற்காக ஆயிரம், ஐநூறு ரூபாய் மதிப்புள்ள நோட்டுகள் செல்லாதவை என அறிவிக்கப்பட வேண்டியது அவசியம் என மத்திய அரசு விளக்கம் அளித்தது.
இந்நிலையில், பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டன.
இதையடுத்து, இந்த வழக்குகளை ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என அப்போதைய தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் பரிந்துரைத்தார்.

