திருவனந்தபுரம்: கேரளாவில் இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டதாக வெளியான தகவல் குறித்து விசாரணை நடத்த அம்மாநில அரசு சிறப்புக் குழு ஒன்றை அமைத்துள்ளது.
இந்நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் மாயமான 12 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
கேரள மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டத்தில் உள்ள இலந்தூரைச் சேர்ந்தவர் பகவல் சிங். அப்பகுதி மக்களுக்கு அவர் பாரம்பரிய மருத்துவராக அறிமுகமாகியிருந்தார். மனைவி லைலாவுடன் வசித்து வந்த பகவல் சிங்குக்கு இணையம் வழி அறிமுகமானார் ஷஃபி. ஓரளவு பழகிய பின்னர், தமக்கு மந்திரங்கள் தெரியும் என்றும் இளம் பெண்களை நரபலி கொடுத்தால் பெரும் செல்வத்தை அடைய முடியும் என்றும் பகவல் சிங்கிடம் கூறியுள்ளார் ஷஃபி.
நரபலிக்கு தேவைப்படும் பெண்களைத் தாமே அழைத்து வருவதாக ஷஃபி கூறியதை பகவல் சிங் ஏற்றுக்கொண்டார்.
இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த 59 வயது ரோஸ்லின், தமிழகத்தின் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பத்மா ஆகிய இருவரும் திடீரென அடுத்தடுத்து மாயமாகினர்.
இருவரும் காணாமல் போனது ஒரே மாதிரியாக இருந்ததால் இரு மாநில காவல்துறையினரும் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
பத்மாவின் கைபேசி கடைசியாக இயங்கிய இடத்தை வைத்து தேடுதல் வேட்டை நடத்தியபோது ஷஃபியுடன் அவர் நடந்து செல்லும் காட்சிகள் அடங்கிய கண்காணிப்பு கேமரா காணொளிப் பதிவுகள் கிடைத்தன.
இதையடுத்து அவர் கைதானார். பின்னர் நடந்த விசாரணையில் மாயமான இரு பெண்களையும் பகவல் சிங் வீட்டுக்கு அழைத்துச் சென்று நரபலி கொடுத்ததாகவும் பிறகு இருவரது உடல்களையும் துண்டு துண்டாக வெட்டி வீட்டிலேயே புதைத்ததாகவும் ஷஃபி தமது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, பகவல் சிங் தம்பதியரும் ஹிகாப்பும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே, கேரளாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும், கொச்சி நகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 13 பெண்கள் காணாமல் போயுள்ளனர்.
அவர்களில் ஒரு பெண்ணின் உடல் மட்டுமே மீட்கப்பட்டுள்ள நிலையில், மற்ற 12 பெண்களின் கதி என்னவானது என்பது இன்னும் தெரியவில்லை.
அவர்களும் நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் எனும் சந்தேகம் எழுந்துள்ளது.

