கடலில் விழுந்த இந்திய கடற்படை விமானம்: விமானி பத்திரமாக மீட்பு
பானாஜி: பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படைக்கு சொந்தமான 'மிக் 29-கே' போர் விமானம் கோவா கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. நேற்று முன்தினம் காலை இந்த விமானத்தில் பறந்த விமானி பத்திரமாக மீட்கப்பட்டார். விமான தளத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது அந்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. விமானத்தில் இருந்து துரித கதியில் வெளியேறியதால் விமானி உயிர்தப்பினார். ரஷ்ய தயாரிப்பான 'மிக் 29-கே' ரக போர் விமானம், அனைத்து வானிலையிலும் இயங்கக்கூடிய போர் விமானம் ஆகும்.
இருமல் மருந்தால் குழந்தைகள் பலி: நிபுணர் குழு அமைத்த மத்திய அரசு
சண்டிகர்: இந்திய நிறுவனம் தயாரித்த இருமல் மருந்தை உட்கொண்ட 66 குழந்தைகள் காம்பியா நாட்டில் உயிரிழந்துவிட்டதாக புகார் எழுந்த நிலையில், இது குறித்து விசாரிக்க நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பான உலக சுகாதார அமைப்பின் அறிக்கையை இந்த நிபுணர் குழு ஆய்வு செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹரியானா மாநிலத்தில் உள்ள மெய்டன் மருந்து நிறுவனம் நான்கு வகையான இருமல் மருந்துகளை தயாரித்து வருகிறது. இவை ஆப்பிரிக்காவின் காம்பியா நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வரும் நிலையில், 66 குழந்தைகள் பலியான தகவல் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே மெய்டன் மருந்து நிறுவனம், தனது உற்பத்தியை நிறுத்தி வைக்க வேண்டும் என மாநில அரசு உத்தரவு பிறப்பித்தது.
ஹிஜாப் வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர்
புதுடெல்லி: கர்நாடகாவில் உள்ள கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய அம்மாநில அரசு தடை விதித்ததை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. வழக்கை விசாரித்த இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். முன்னதாக, கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும் என கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து இருந்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மாணவிகள் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த பின்னர் ஹிஜாப் தடைக்கு ஆதரவாக ஒரு நீதிபதியும், ஹிஜாப் தடைக்கு எதிராக ஒரு நீதிபதியும் தீர்ப்பு வழங்கியுள்ளனர். மாறுபட்ட தீர்ப்பால் ஹிஜாப் வழக்கை கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனி அடையாளத்தை ஏற்படுத்திய இளையர்கள்: அதிபர் பெருமிதம்
அகர்தலா: அனைத்துலக அளவில் இந்திய இளையர்கள் சாதித்து வருவதாக அதிபர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். திரிபுரா மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், தகவல் தொழில் நுட்பத் துறையில் இந்திய இளையர்கள் தனித்துவமான அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளனர் என்றும் இது இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பதாகவும் குறிப்பிட்டார்.
கொலை வழக்கு: மல்யுத்த வீரர் சுஷில் குமார் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
புதுடெல்லி: கொலை வழக்கை எதிர்கொண்டுள்ள இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமார் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்தியாவுக்கு ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்று கொடுத்த அவர், மற்றொரு மல்யுத்த வீரரான சாகர் ராணாவை கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சுஷில் குமார் மனைவிக்குச் சொந்தமான அடுக்கு மாடி வீட்டில் வசித்து வந்த சாகர் ராணா, அவ்வீட்டை காலி செய்ய மறுத்துவிட்டார். இதனால் ஏற்பட்ட மோதலின்போது சுஷில் குமார் தாக்கியதில் படுகாயம் அடைந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து சுஷில் குமார் கைதானார். இந்த வழக்கில் அவர் உட்பட 17 பேர் மீது டெல்லி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

