புதுடெல்லி: கொரோனா நெருக்கடி காரணமாக உலக அளவில் கோடிக்கணக்கானோர் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டோர் எண்ணிக்கை இந்தியாவில்தான் அதிகம் என்றும் அவ்வங்கி குறிப்பிட்டுள்ளது.
"கொரோனா தொற்றுப்பரவல் காரணமாக லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். தொழில் நடவடிக்கைகள் நிலைகுத்தியதால் உலகப் பொருளியல் வெகுவாகப் பாதிக்கப்பட்டது.
"மேலும், உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 7.1 கோடி பேர் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டனர்," என்று உலக வங்கி கூறியுள்ளது.
உலக அளவில் ஏழ்மை நிலைக்கு மாறியவர்களில் சுமார் 79 விழுக்காட்டினர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்று குறிப்பிட்டுள்ள உலக வங்கி, எண்ணிக்கை அளவில் இது 5.6 கோடி பேர் என்று தெரிவித்துள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு அனைத்துலக அளவில் தீவிர வறுமை விகிதமானது, 8.4%ஆக இருந்தது என்றும் 2020ஆம் ஆண்டு அது 9.3 விகிதமாக அதிகரித்தது என்றும் உலக வங்கி அறிக்கை கூறுகிறது.
மேலும், கொரோனா நெருக்கடியால் உலகம் முழுவதும் உள்ள மொத்த ஏழைகளின் எண்ணிக்கை 70 கோடியாக அதிகரித்ததாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டில் வறுமையை அளவிட உதவும் ஆய்வின் மூலம் திரட்டப்படும் தரவுகளை இந்திய அரசு அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை. கடந்த 2011ஆம் ஆண்டில் தொடங்கி இன்று வரை இந்தத் தரவுகள் வெளியிடப்படாததால் உண்மை நிலவரம் தெரியவில்லை எனக் கூறப்படுகிறது.
அதேசமயம் உலகளாவிய, வட்டார அளவில் வறுமை மதிப்பீடுகளில் முக்கியமான இடைவெளியை நிரப்ப இத்தகைய தரவுகள் வெகுவாக கைகொடுப்பதாக உலக வங்கி கூறுகிறது.
இதற்கிடையே, நடப்பாண்டில் வறுமை ஒழிப்பு நடவடிக்கைகள் மேலும் தடைபடும் என்றும் உக்ரேன் போர், சீனாவின் வளர்ச்சியில் மந்தநிலை, எரிபொருள் விலை உயர்வு ஆகியவை காரணமாக உலக அளவில் வளர்ச்சி குறையும் என்றும் உலக வங்கி தற்போது வெளி யிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

