திருவனந்தபுரம்: மொழி, கலாசாரம் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அதற்குக் காரணமானவர்கள் காங்கிரஸ் கட்சியின் முழு பலத்தையும் பார்க்க வேண்டியது இருக்கும் என ராகுல் காந்தி (படம்) எச்சரித்துள்ளார்.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் எவ்வாறு வாழ வேண்டும், அவர்களின் குழந்தைகள் எந்த மொழியில் தேர்வுகளை எழுத வேண்டும் என்பதை எல்லாம் வேறு யாரும் தீர்மானிக்க முடியாது என்று கர்நாடகாவில் மேற்கொண்டுள்ள நடைப்பயணத்தின்போது அவர் குறிப்பிட்டார்.
"கர்நாடகா மக்கள் கன்னடம் பேச விரும்பினால், தமிழ்நாட்டு மக்கள் தமிழ் பேச விரும்பினால், கேரள மக்கள் மலையாளம் பேச விரும்பினால் அவர்களுக்கு அதற்கான உரிமை உண்டு, அதனை அனுமதிக்கவும் வேண்டும்.
"மொழி என்பது பேசுவதற்கு மட்டும் பயன்படுத்தப்படுவதில்லை. மொழி என்பது வரலாறு, கலாசாரம். அது நமது சிந்தனை வளம். மக்கள் அவர்களின் மொழியில் பேசுவதை யாராலும் தடுக்க முடியாது," என்றார் ராகுல் காந்தி.
மத்திய பணியாளர்கள் தேர்வாணையம் இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வுகளை நடத்துகிறது என்றும் மாநில மொழிகளில் தேர்வெழுத அனுமதிப்பதில்லை என்றும் பரவலாகப் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்தபோதே ராகுல் மேற்குறிப்பிட்ட எச்சரிக்கையை விடுத்தார். பல்வேறு மாநிலக் கட்சிகள் இத்தேர்வுகளை மாநில மொழியில் நடத்த வேண்டு மென வலியுறுத்தி உள்ளன.

