லக்னோ: பல்வேறு முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய பெண் செய்தியாளர் ராணா அயூப் மீது பண மோசடி குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவானது.
அறக்கட்டளை என்ற பெயரில் பொதுமக்களிடம் பணம் வசூலித்து மோசடி செய்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மொத்தம் ரூ.1.77 கோடி மோசடி செய்ததாக குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள நிலையில் அவரது வங்கிக்கணக்கையும் முடக்கி உள்ளனர். அறக்கட்டளை மூலம் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதாகக் குறிப்பிட்டு அவர் நிதி திரட்டியுள்ளார். அதிலிருந்து ரூ.74.50 லட்சத்தை பிரதமர் நிவாரண நிதிக்காக அனுப்பிய பின்னர், ஐம்பது லட்சம் ரூபாயை தமது சொந்த வங்கிக் கணக்கில் நிரந்தர வைப்புத் தொகையாக செலுத்தியது தெரிய வந்துள்ளது.
மூன்று வெவ்வேறு வங்கிக் கணக்குகளில் அவர் அறக்கட் டளைக்குரிய தொகையைச் சேமித்து வைத்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டதையடுத்து, காவல் துறை விசாரணை மேற்கொண்டது.
இந்நிலையில், மத்திய அமலாக்கத்துறை விசாரணை நடத்தியதன் அடிப்படையில், ராணா அயூப்பின் வங்கிக்கணக்கு முடக்கப்பட்டது. மும்பையைச் சேர்ந்த இவர், 'தி வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகையில் கட்டுரைகள் எழுதி உள்ளார்.
'தெகல்ஹா' புலனாய்வு இதழிலும் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். தகவல் தொழில்நுட்பச் சட்டம், கறுப்பு பணம் சட்டம் ஆகியவற்றின் கீழ் ராணா ஆயுப் மீது வழக்குப் பதிவாகி உள்ளது.

