மும்பை: இந்தியா, பொருளியலில் அதிவேக வளர்ச்சி காணும் நாடாக இருக்கும் என்று அந்நாட்டின் மத்திய வங்கியின் ஆளுநர் உறுதி கூறியுள்ளார்.
ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு கூட்டம் கடந்த மாதம் 30ஆம் தேதி நடந்தது. அதில், கடனுக்கான வட்டியை 0.5 விழுக்காடு உயர்த்த முடிவு செய்யப்பட்டது.
ஆனால் அந்த கூட்டத்தில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் ஆற்றிய உரை வெள்ளிக் கிழமை வெளியிடப்பட்டது. அதில், கலவையான அறிகுறிகள் தென் பட்டாலும் நாட்டின் பொருளியல் நடவடிக்கைகள் தொடர்ந்து வேகம் எடுத்துள்ளன. உலகளாவிய அரசியல் நிலவரங்கள், சவால்களை உண்டாக்கி வருகின்றன. அதையும் மீறி நடப்பு நிதி ஆண்டில் பொரு ளியலில் வேகமாக வளரும் நாடு களில் ஒன்றாக இந்தியா இருக்கும் என்று திரு சக்திகாந்த தாஸ் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே அனைத்துலக நாணய நிதியம்-உலக வங்கி ஆண்டுக் கூட்டத்தையொட்டி வாஷிங்டன் சென்றுள்ள இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அங்கு அனைத்துலக நாணய நிதியத்தின் துணை நிர்வாக இயக்குநர் கீதா கோபிநாத்தைச் சந்தித்துள்ளார். அப்போது உலக நடப்பு, அடுத்த ஜி-20க்கு இந்தியா தலைமையேற்கும் விவகாரம் குறித்து இருவரும் பேசினர்.

