புதுடெல்லி: கோஹினூர் வைரத்தை இங்கிலாந்திடமிருந்து மீட்க தொடர்ந்து முயற்சிகள் எடுக்கப்படும் என்று இந்திய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் அரிந்தம் பக்சி தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு மே 6ஆம் தேதி கமிலா ராணியாக மகுடம் சூட்டப்படும்போது கோஹினூர் வைரம் பதிக்கப்பட்ட கிரீடம் அவருக்கு அணிவிக்கப்படும் என பிரிட்டிஷ் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் கிடைத்த 108 கேரட் எடை கொண்ட வைரம் பிரிட்டிஷ் அரச குடும்பத்திடம் இருந்து வருகிறது.
அந்த வைரம் பதிக்கப்பட்ட கிரீடத்தை 2ஆம் எலிசபெத் ராணியார் அணிந்து வந்தார். அவர், அண்மையில் காலமானதைத் தொடர்ந்து உலகின் ஆகப்பெரிய வைரங்களில் ஒன்றான கோஹினூர் வைரத்தை இந்தியாவுக்கு மீட்டு வருவது குறித்து மீண்டும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இந்த நிலையில் டெல்லியில் வெள்ளிக்கிழமை அன்று செய்தியாளர்களிடம் பேசிய அரிந்தம் பக்சி, அப்போதைக்கு அப்போது இந்தப் பிரச்சினையை இங்கிலாந்து அரசாங்கத்திடம் எழுப்பி வருகிறோம். கோஹினூர் வைரத்தை சுமூகமான முறையில் கொண்டு வரும் வழிகளை தொடர்ந்து ஆராய்வோம் என்று கூறியுள்ளார்.
இது குறித்து சில ஆண்டு களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் பதில் அளிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் சொன்னார்.
கோஹினூர் வைரத்தின் மதிப்பு 150 மில்லியன் யுஎஸ் டாலர் என நம்பப்படுகிறது. 1849ல் துலீப் சிங் மகாராஜா அந்த வைரத்தை விக் டோரியா மகாராணிக்கு கொடுத்த தாகக் கூறப்படுகிறது.

