பெங்களூரு: பெங்களூரு நகரில் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நிகழ்வாக உலகின் ஆகப்பெரிய பயணிகள் விமானம் வெள்ளிக்கிழமை பிற்பகலில் தரையிறங்கியது.
தென்இந்தியா நகர் ஒன்றில் ஆகப்பெரிய விமானம் தரை இறங்குவது இதுவே முதல்முறை. இது, எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் 'ஏ380' ரக விமானமாகும். விமானத்தை கேப்டன் நிகில் தியாகராஜனும் பெங்களூர் நகரைச் சேர்ந்த சண்டீப் பிரபுவும் ஓட்டி வந்தனர். இது, இரண்டு அடுக்கு வசதியை கொண்டது. 500க்கும் மேற்பட்ட இருக்கைகள் உள்ளன.
எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் பெங்களூருவுக்கு வருகிற 30ஆம் தேதியிலிருந்து அந்த விமானப் போக்குவரத்தை தொடங்க உள்ளது. அதற்கு முன்னதாகவே, அந்த விமானத்தின் சேவை அக்டோபர் 14ஆம் தேதி இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி அந்த மிகப்பெரிய விமானம் துபாய்-பெங்களூரு இடையே போக்குவரத்தை தொடங்கியுள்ளது.
அந்த விமானம் முதல்முறையாக நேற்று துபாயில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு மாலை 3.40 மணிக்கு பெங்களூரு அனைத்துலக விமான நிலையம் வந்து சேர்ந்தது.
அந்த விமானத்தை கர்நாடக மாநில கூட்டுறவு அமைச்சர் எஸ்.டி.சோமசேகர், இந்தியாவுக்கான ஐக்கிய அரபு சிற்றரசுகளின் தூதர் அகமது அப்துல் ரகுமான் அல்பென்னா, பெங்களூரு கெம்பே கவுடா அனைத்துலக விமான நிலைய நிர்வாக இயக்குநர் ஹரி மரார் மற்றும் உயர் அதிகாரிகள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.
அந்த விமானத்தில் 224 பயணிகள் பயணம் செய்து பெங்களூரு வந்தனர்.
இந்தியாவில் டெல்லி, மும்பை, ஐதராபாத் மற்றும் பெங்களூரு ஆகிய 4 விமான நிலையங்களில் மட்டுமே ஏர்பஸ் ஏ380 ரக விமானங்கள் தரையிறங்கும் வசதி உள்ளது.

