இந்தியாவுக்கு அனைத்துலக நாணய நிதியம் பாராட்டு
புதுடெல்லி: ஜம்மு, காஷ்மீர் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் 75 மின்னிலக்க வங்கிகள் தொடங்கப்பட்டுள்ளன.
காணொளி வசதி மூலம் நேற்று பிரதமர் மோடி இந்த வங்கிகளைத் திறந்து வைத்தார்.
ஜம்மு காஷ்மீரில் இரண்டு வங்கிகள் உட்பட பல்வேறு முக்கிய நகரங்களில் தொடங்கப்பட்டுள்ள இந்த மின்னிலக்க வங்கிகள் மூலம் சேமிப்புக் கணக்குகள் திறப்பது, கணக்கு இருப்புச் சரிபார்ப்பு, அச்சிடும் பாஸ்புக் பெறுவது உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படும் என வங்கி வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும், நிதிப் பரிமாற்றம், நிலையான வைப்பு முதலீடுகள், கடன் விண்ணப்பங்கள், பற்று அல்லது கடன் அட்டைகளுக்கான விண்ணப்பம். சேவைக் கட்டணம், வரி செலுத்துதல் போன்ற பல்வேறு சேவைகள் மின்னிலக்க வங்கிகளில் வழங்கப்படும்.
பொதுத்துறையில் 11 வங்கிகளும், தனியார் துறையில் 12 வங்கிகளும், ஒரு சிறு நிதி வங்கியும் இந்தப் பணியில் ஈடுபட்டு வந்தன என்றும், அப்பணி முடிவடைந்ததை அடுத்து, மின்னிலக்க வங்கிகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன என்றும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கைகளை அனைத்துலக நாணய நிதியம் (ஐஎம்எப்) பாராட்டி உள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக மின்னிலக்கமயமாக்கும் நடவடிக்கையில் இந்தியா முன்னிலை வகிப்பதாக அந்த நிதியம் கூறியது.
கொரோனா தொற்றுப் பரவல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உலக நாடுகள் அந்த வளையத்தில் இருந்து வெளியே வந்தபோது, மின்னிலக்கமயமாக்கம் கூடுதல் முக்கியத்துவத்தை பெற்றதாக ஐஎம்எஃப் ஆசிய பசிபிக் துறையின் துணை இயக்குநர் அன்னர் மேரி குல்டே உல்ப் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
"இந்தியா பல்வேறு புதுமைகளை அறிமுகப்படுத்தி, பல நிர்வாகத் தடைகளைக் கடந்து மின்னிலக்கமயமாக்கும் கொள்கையை செயல்படுத்தி வருகிறது. அரசு சேவைகளை மின்னிலக்கமயமாக்குவதில் இந்தியா முன்னணியில் உள்ளது," என்று அன்னர் மேரி பாராட்டு தெரிவித்தார்.

